ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வாங்குங்கள் என பேச்சு: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. புகார்


ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வாங்குங்கள் என பேச்சு: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. புகார்
x
தினத்தந்தி 10 April 2019 9:45 PM GMT (Updated: 2019-04-11T01:26:54+05:30)

ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் கேட்டு வாங்குங்கள் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாக கூறி, அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. புகார் அளித்துள்ளது.

சென்னை, 

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம், அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் அளித்த புகார்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேனி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். கடந்த 9-ந் தேதி சோழவந்தான் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ‘உங்கள் ஓட்டை ஜனநாயக முறையில் நிறைவேற்ற வேண்டாம். ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வாங்கிக்கொண்டு வாக்களியுங்கள்’ என்று பேசினார். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய குற்றமாகும்.

தேர்தல் விதிமீறல்

மக்களை தவறான திசையில் திருப்பும் நோக்கத்தில் இப்படி பேசியிருக்கிறார். அ.தி.மு.க. வேட்பாளருக்கு எதிராக மக்களை தூண்டுவதுபோல் அவரது பேச்சு அமைந்துள்ளது. எனவே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது தேர்தல் விதிமீறல், மக்களை லஞ்சம் வாங்க தூண்டுதல், சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.

மேலும், தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து சைதாப்பேட்டையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதியின்படி, மாநகராட்சி பகுதிகளில் சுவர்களில் எந்தவித தேர்தல் விளம்பரமும் செய்யக்கூடாது.

ஆனால் தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியிருப்பதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதோடு, அந்த சுவரொட்டிகளை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலகட்டத்தில் பழம்பெரும் அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளை மூட தேவையில்லை. ஆனால் சென்னை அண்ணாசாலையில் வைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். சிலை மூடப்பட்டு இருந்தது.

இதை தேர்தல் ஆணையத்துக்கு அ.தி.மு.க. கட்சி சுட்டிக்காட்டியது. அதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். சிலையை மூடியிருந்த போர்வையை அகற்ற சத்யபிரத சாகு உத்தரவிட்டார். அதற்கு அந்த கட்சி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Next Story