இரண்டுமே ஊழல் கட்சிகள் காங்கிரஸ் ஆட்சியில் போபர்ஸ்; பா.ஜ.க. ஆட்சியில் ரபேல் சென்னை தேர்தல் பிரசாரத்தில் மாயாவதி கடும் தாக்கு


இரண்டுமே ஊழல் கட்சிகள் காங்கிரஸ் ஆட்சியில் போபர்ஸ்; பா.ஜ.க. ஆட்சியில் ரபேல் சென்னை தேர்தல் பிரசாரத்தில் மாயாவதி கடும் தாக்கு
x
தினத்தந்தி 11 April 2019 4:15 AM IST (Updated: 11 April 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய 2 கட்சிகளுமே ஊழல் கட்சிகள் என்றும், காங்கிரஸ் ஆட்சியில் போபர்ஸ் ஊழலும், பா.ஜனதா ஆட்சியில் ரபேல் ஊழலும் இதற்கு சான்று என சென்னை தேர்தல் பிரசாரத்தில் மாயாவதி கடுமையாக தாக்கி பேசினார்.

சென்னை,

காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய 2 கட்சிகளுமே ஊழல் கட்சிகள் என்றும், காங்கிரஸ் ஆட்சியில் போபர்ஸ் ஊழலும், பா.ஜனதா ஆட்சியில் ரபேல் ஊழலும் இதற்கு சான்று என சென்னை தேர்தல் பிரசாரத்தில் மாயாவதி கடுமையாக தாக்கி பேசினார்.

ஆடம்பர செலவு

தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அந்த கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி பேசியதாவது:-

70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் அதிகமான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. இப்போது பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது அவர்கள் எடுத்த தவறான நடவடிக்கையால் மத்தியில் மட்டும் அல்ல மாநிலங்களிலும் ஆட்சி பொறுப்பை இழந்தது. சாதி பிரிவினை, மதவாதம் மற்றும் மக்களை ஏமாற்றும் நடவடிக்கை போன்றவற்றால் வருங்காலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை.

காவலாளிகள் (சவுக்கிதார்) என்று சொல்பவர்கள் எத்தனை முயற்சி எடுத்தாலும் இனி வெற்றி பெற முடியாது. நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து ஏழைகள், தலித்துகள், சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்படுகிறார். அவர்களது நிலங்கள் பா.ஜ.க. அரசால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆடம்பர செலவுக்காக அரசு கஜனாவை மோடி காலி செய்திருக்கிறார். அந்த தொகையை ஏழைகளின் நலனுக்காக அவர் பயன்படுத்தி இருக்கலாம்.

இட ஒதுக்கீடு

மோடி இப்போது தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றுவேன் என்று சொன்ன திட்டங்களை அவர் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது நிறைவேற்றி இருக்கலாம். ஆனால் அவர், 5 ஆண்டு காலம் பெரிய பணக்காரர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு காவலாளியாக இருந்தார். காங்கிரஸ் ஆட்சியிலும் சரி, பா.ஜ.க. ஆட்சியிலும் சரி தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் சிறுபான்மையினர் வஞ்சிக்கப்பட்டனர்.

தனியார் துறையில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பையும் 2 கட்சிகளும் வெளியிடவில்லை. இதனால் எதிர்காலத்தில் இட ஒதுக்கீடு இல்லாமல் போய்விடுமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது.

ஊழல் தலைவிரித்தாடுகிறது

தேர்தலை கவனத்தில் வைத்தே, உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஊழல் தலை விரித்தாடுகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போபர்ஸ் ஊழல், பா.ஜ.க. ஆட்சியில் ரபேல் ஊழல் ஆகியவையே இதற்கு சான்று..

காங்கிரசை போலவே பா.ஜ.க.வும் சி.பி.ஐ. மற்றும் வருமானவரி துறையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறது. தலித் மக்களுக்கு எதிரான ஆட்சியே இதுவரை நடந்திருக்கிறது. தலித் மக்களுக்கு எதிரான நடவடிக்கையை இனியும் பொறுத்து கொள்ள முடியாது. தேர்தல் நேரத்தில் நிறைய பொய்களை சொல்லி வருகிறார்கள். அதனால் தான் பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடவில்லை.

ஏழ்மை

காங்கிரசை போலவே பா.ஜ.க.வும் ஏமாற்றம் நிறைந்த வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள். காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலத்தில் நிறைவேற்றுவதற்கு தயாரா? மாதத்துக்கு ரூ.6 ஆயிரம் தருவோம் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி கொடுத்துள்ளது. மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் கொடுத்தால் மட்டும் ஏழ்மை ஒழிந்துவிடாது.

வேலைவாய்ப்பை கொடுத்தால் மட்டுமே ஏழ்மையை ஒழிக்கமுடியும். அதனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ.6 ஆயிரம் தரமாட்டோம். ஏழைகளுக்கு மத்திய அரசு மற்றும் அரசு சார்ந்த வேலைகள் ஏற்படுத்தி கொடுப்போம். மத்தியில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சி அமையும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பதவி உயர்வு மற்றும் தனியார் துறையில் இட ஒதுக்கீடு கொண்டு வருவோம். மேலும் ஏற்கனவே நிரப்பப்படாமல் உள்ள இடங்களும் இட ஒதுக்கீட்டின்படி நிரப்பப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story