பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் மேலும் ஒருவர் கைது காவலில் எடுத்து போலீசார் விசாரணை


பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் மேலும் ஒருவர் கைது காவலில் எடுத்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 April 2019 1:44 AM IST (Updated: 11 April 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் மேலும் ஒருவர் கைது காவலில் எடுத்து போலீசார் விசாரணை

கோவை,

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை அம்பலப்படுத்திய மாணவியின் அண்ணனை தாக்கியவருக்கு பாலியல் சம்பவத்தில் தொடர்பு இருப்பதால் அவரை போலீசார் கைது செய்ததுடன், 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவம்

பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை மயக்கி, ஆபாச வீடியோ எடுத்து பலாத்காரம் செய்த வழக்கில் சபரிராஜன் (வயது 25), அவருடைய நண்பர்கள் சதீஷ் (27), வசந்தகுமார் (24) ஆகியோரை கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி பொள்ளாச்சி போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் முக்கிய குற்றவாளியாக இருந்த திருநாவுக்கரசும் கைது செய்யப்பட்டார். கைதான 4 பேரும் தற்போது கோவை மத்திய சிறையில் உள்ளனர்.

இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 19 வயது மாணவி கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

அண்ணன் மீது தாக்குதல்

இதைத்தொடர்ந்து, மாணவியின் அண்ணனை பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையத்தை சேர்ந்த செந்தில் (33), மற்றொரு வசந்தகுமார் (26), மணிவண்ணன் (25), பார் நாகராஜ் (28), பொள்ளாச்சி பாபு (26) ஆகிய 5 பேரும் வழக்கை வாபஸ் பெறக்கோரி, அவரை தாக்கினர்.

இது குறித்து மாணவியின் அண்ணன் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் செந்தில், மணிவண்ணன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில் 4 பேர் கைதானார்கள். இந்த வழக்கில் தலைமறைவான மணிவண்ணன் கடந்த மாதம் 25-ந் தேதி கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

பாலியல் வழக்கில் கைது

அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணை முடிந்ததும் மேலும் கூடுதலாக 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள்.

இதையடுத்து போலீசார், மணிவண்ணனை பாலியல் பலாத்கார வழக்கில் சேர்த்து கைது செய்தனர். அத்துடன் மணிவண்ணனிடம் மேலும் விசாரணை நடத்த 10 நாட்கள் அனுமதி கேட்டு கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் போலீசார் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர்.

மனு விசாரணையின் போது, அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி நாகராஜன் அனுமதி அளித்தார். இதையடுத்து போலீசார் மணிவண்ணனை பாதுகாப்புடன் ரகசிய இடத்துக்கு அழைத்துச்சென்று தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story