காங்கிரஸ் அறிவித்த வறுமை ஒழிப்பு திட்டம்: சாத்தியமில்லை என்று கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது கே.எஸ்.அழகிரி அறிக்கை


காங்கிரஸ் அறிவித்த வறுமை ஒழிப்பு திட்டம்: சாத்தியமில்லை என்று கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது கே.எஸ்.அழகிரி அறிக்கை
x
தினத்தந்தி 11 April 2019 5:25 PM GMT (Updated: 11 April 2019 5:25 PM GMT)

காங்கிரஸ் கட்சி தொடக்க காலம் முதல் திட்டமிட்ட பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தி, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதில் மகத்தான சாதனைகள் புரிந்துள்ளது.

சென்னை, 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

காங்கிரஸ் கட்சி தொடக்க காலம் முதல் திட்டமிட்ட பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தி, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதில் மகத்தான சாதனைகள் புரிந்துள்ளது. மும்பையில் இருந்து அகமதாபாத்திற்கு நடைமுறையில் சாத்தியமில்லாத புல்லட் ரெயில் விடுவதற்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கிய நரேந்திரமோடி, வறுமையை ஒழிப்பதற்கு காங்கிரஸ் கட்சி ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குவது சாத்தியமில்லை என்று கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயலாகும்.

ஏற்கனவே, மத்திய காங்கிரஸ் கூட்டணியில் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தில் வாழ்கிற ஏழை–எளிய மக்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்களது வாங்கும் சக்தி உயர்ந்தது, வாழ்க்கைத் தரமும் உயர்ந்தது. அத்தகைய சாதனைகளை படைத்த காங்கிரஸ் கட்சி, இன்றைக்கு வறுமைக்கு எதிராக இந்த திட்டத்தை செயல்படுத்தி இந்தியாவில் இருந்து நிரந்தரமாக வறுமையை விரட்டுகிற திட்டத்தை தேர்தல் அறிக்கை மூலம் அறிவித்திருக்கிறது. இதை எதிர்ப்பவர்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவர்கள். அவர்களது எதிர்ப்பு என்பது நாட்டு மக்களாலே நிராகரிக்கப்படும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலே காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் அமோக ஆதரவு தருவார்கள் என்பது உறுதி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story