நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில், தி.மு.க. ஆதரவு யாருக்கு? மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி கேள்வி
நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் எந்த கட்சிக்கு ஆதரவு என்று கூற முடியுமா? என மு.க.ஸ்டாலினுக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
நாமக்கல்,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், நேற்று நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த அவர் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து திறந்த வேனில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
நாமக்கல் பொய்யேரிக்கரையில் தேர்தல் பிரசாரம் செய்தபோது அவர் பேசியதாவது:-
சந்தர்ப்பவாத கூட்டணி
தி.மு.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்றால் மு.க.ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது. தி.மு.க. குடும்ப கட்சி, கார்ப்பரேட் கம்பெனி என்ற வைகோ, தற்போது தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து உள்ளார். கொங்குபேரவை ஒரு அமைப்பு. அந்த அமைப்பு இன மக்களுக்கு நன்மைகளை பெற்று தர தொடங்கப்பட்டது.
இதற்கு அரசியல் சாயம் பூசி ஒருசிலர் பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக இந்த அமைப்பை பயன்படுத்துகிறார்கள். தி.மு.க.வுக்கு அந்த அமைப்பை அடமானம் வைத்த மாதிரி, அவர்கள் தி.மு.க. சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. யார் அதிக இடங்களில் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் தான் ஆட்சி அமைக்க முடியும். நம்முடைய கூட்டணியை பொறுத்த வரையில் ஒருமித்த கருத்தோடு மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என அவரை ஆதரித்து வருகிறோம். எதிர்க்கட்சியினர் அப்படி இல்லை. மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறார்கள்.
யாருக்கு ஆதரவு?
தமிழகத்தில் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து உள்ளன. கேரளாவில் காங்கிரசும், கம்யூனிஸ்டும் எதிர்த்து போட்டியிடுகின்றன. தமிழகத்தில் காங்கிரசுக்கு கம்யூனிஸ்டு கட்சியினர் ஓட்டு கேட்கிறார்கள். கம்யூனிஸ்டுக்கு காங்கிரஸ் கட்சியினர் ஓட்டு கேட்கின்றனர். இது சந்தர்ப்பவாத கூட்டணி தானே?.
இங்கு ஒரு கூட்டணி, அங்கு ஒரு கூட்டணி. இது மாநிலத்திற்கு நடைபெறும் தேர்தல் இல்லை. நாடாளுமன்ற தேர்தல் ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு நடைபெறும் தேர்தல். மாநிலத்திற்கு மாநிலம் கூட்டணி மாற்றி, இவர்களால் எப்படி நிலையான ஆட்சி தரமுடியும்? நாட்டு மக்களுக்கு எப்படி நன்மை செய்ய முடியும்?
மு.க.ஸ்டாலின், நீங்கள் கேரளாவில் காங்கிரசை ஆதரிக்கிறீர்களா? கம்யூனிஸ்டு கட்சியை ஆதரிக்கிறீர்களா? சொல்லுங்கள். உங்கள் கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் இடம் பெற்று உள்ளன.
பாலியல் பலாத்காரம்
அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்கிறார், மு.க.ஸ்டாலின். இந்தியாவிலேயே தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. சட்டம், ஒழுங்கு பேணி காப்பதில் இந்தியாவிலேயே முதலிடம் வகித்து வருகிறது.
பாலியல் பலாத்காரம் அதிகரித்து விட்டதாக ஸ்டாலின் கூறி வருகிறார். எல்லாம் தி.மு.க.வினரால் வந்தது. தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், தனது வீட்டில் வேலை செய்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றார். தற்போது ஜெயிலில் உள்ளார். எப்போது பார்த்தாலும் பழனிசாமி பதில் சொல்லவில்லை என்கிறார், ஸ்டாலின். ஆனால் இதுவரை ராஜ்குமாரை ஏன் மாவட்ட துணை செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கவில்லை என்பதற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்.
இதேபோல் ரெயிலில் கர்ப்பிணியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தி.மு.க. பிரமுகர் ஒருவர் அழகு நிலையத்தில் புகுந்து பெண்ணை தாக்கியது அனைவருக்கும் தெரியும்.
ஸ்டாலின் போகிற இடமெல்லாம் என்னை பற்றி தரக்குறைவாக பேசி வருகிறார். பொய்க்கு நோபல் பரிசு கொடுப்பதாக இருந்தால் ஸ்டாலினுக்கு கொடுத்தால் பொருத்தமாக இருக்கும்.
கானல் நீர்
மு.க.ஸ்டாலின் கண்ட கனவு எதுவும் நிறைவேறவில்லை. முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு அ.தி.மு.க. உடைந்து போய்விடும் என நினைத்தார். அது நடக்கவில்லை. ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றார். அதுவும் நடக்கவில்லை. அவரது கனவு கானல் நீராகிவிட்டது. எனவே எதை பேசுகிறோம் என தெரியாமல் பேசி வருகிறார். தலைவர் என்றால் அதற்கு உரிய அந்தஸ்து இருக்க வேண்டும். தனித்தன்மை வேண்டும். என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து பேச வேண்டும். நீங்கள் தவறாக பேசினால், அதற்கு பதிலடி கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அன்புமணிக்கு வாக்குசேகரிப்பு
சேலம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கோவிந்தசாமி ஆகியோரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓமலூர், ஆட்டையாம்பட்டி, தீவட்டிப்பட்டி, மொம்மிடி ஆகிய இடங்களில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
அவர் பேசும்போது, “கடந்த 22.3.2019 முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இதுவரை சாலை மார்க்கமாக 8 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து 35 நாடாளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளேன்” என்றார்.
Related Tags :
Next Story