பிரதமர் மோடி, ராகுல்காந்தி இன்று மதுரை வருகை உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு
மதுரைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் வர இருப்பதால் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை,
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2-வது முறையாக இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் தமிழகம் வருகிறார். கொச்சியில் தனது பிரசாரத்தை முடிக்கும் அவர் விமானம் மூலம் இரவு 9 மணிக்கு மதுரை வருகிறார். பசுமலை தாஜ் ஓட்டலில் இரவில் தங்கும் அவர் நாளை(சனிக்கிழமை) காலை ஹெலிகாப்டர் மூலம் தேனிக்கு செல்கிறார்.
அங்கு பகல் 11 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் ரவீந்திரநாத்குமார் (தேனி), ராஜ்சத்யன் (மதுரை), திண்டுக்கல் தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்து ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.
ராகுல்காந்தி
இதனை முடித்து விட்டு ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் வரும் மோடி, பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன் (ராமநாதபுரம்), எச்.ராஜா (சிவகங்கை) ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். அதன்பின் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
இதேபோல் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கிருஷ்ணகிரி, சேலத்தில் பிரசாரத்தை முடித்து விட்டு விமானம் மூலம் மதுரைக்கு இன்று மாலை 3.30 மணிக்கு வருகிறார். அங்கு இருந்து ஹெலிகாப்டர் மூலம் தேனி செல்லும் அவர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
பின்னர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு வந்து மண்டேலா நகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். அதன்பின்னர் விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
உச்சக்கட்ட பாதுகாப்பு
ஒரே நாளில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுலும் மதுரையில் இருப்பதாலும், சித்திரை திருவிழா நடந்து வருவதாலும் அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி தங்கும் பசுமலை தாஜ் ஓட்டல், அவர் விமான நிலையம் செல்லும் பாதை முழுவதையும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து உள்ளனர்.
அதே போல் ராகுல் காந்தி கலந்து கொள்ளும் மண்டேலா நகர் பொதுக்கூட்டத்துக்கும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மோடி, ராகுல் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story