இளம்பெண் மர்மசாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் ஓய்வுபெற்ற நீதிபதி ஐகோர்ட்டில் வழக்கு


இளம்பெண் மர்மசாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் ஓய்வுபெற்ற நீதிபதி ஐகோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 11 April 2019 10:15 PM GMT (Updated: 2019-04-12T00:43:54+05:30)

அமைச்சர், முன்னாள் எம்.எல்.ஏ. தலையிடுவதால், இளம்பெண் மர்ம சாவு தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக்கோரி ஓய்வுபெற்ற நீதிபதி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை, 

சென்னை கே.கே.நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி, ஜி.எஸ்.ஆறுமுகம் (வயது 73). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மரணம்

என்னுடைய மைத்துனர் தமிழ்மணியின் மகள் சவுந்தர்யாவை, கடந்த 2013-ம் ஆண்டு வேதாரண்யத்தை சேர்ந்த அசோக் என்பவருக்கு திருமணம் செய்துகொடுத்தோம். திருமணத்துக்கு பின்னர்தான் அசோக் மதுபோதைக்கு அடிமையானவர் என்று தெரியவந்தது.

அவர் தினமும் போதையில் சவுந்தர்யாவை அடித்து துன்புறுத்துவார். இதை தன் அத்தைகள் மற்றும் சகோதரிகளிடம் சவுந்தர்யா சொல்லியுள்ளார்.

இந்தநிலையில், கடந்த டிசம்பர் 6-ந்தேதி சவுந்தர்யாவை, அசோக் அடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த சவுந்தர்யா இறந்துவிட்டார்.

எரித்துவிட்டனர்

தகவல் அறிந்து நாங்கள் அனைவரும் சென்றோம். சவுந்தர்யாவின் சாவு குறித்து விசாரித்தபோது, அசோக்கின் தந்தை ‘தான் செல்வந்தர் என்பதால் தன்னை எதுவும் செய்ய முடியாது’ என்றார். அசோக் கின் நெருங்கிய உறவினரான முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜ், ‘பிரச்சினையை முடித்துக்கொள்ள எவ்வளவு பணம் வேண்டும்? என்று கேட்டார்.

இதனால் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சவுந்தர்யாவின் தலையிலும் காயம் இருந்தது. எனவே, உடலை பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்று கூறினேன். என் மனைவி, வேதாரண்யம் போலீசில் சவுந்தர்யாவின் மர்மசாவு குறித்து புகார் செய்தார்.

இதையடுத்து, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வந்து, பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று சமரசம் பேசினார். அதேநேரம், குடிபோதையில் இருந்த அடியாட்கள், பிணத்தை தூக்கிச்சென்று, அவசர அவசரமாக பெட்ரோல் ஊற்றி எரித்து சாம்பலாக்கி விட்டனர்.

விசாரணைக்கு தடை

எங்கள் புகாரை முதலில் வாங்க மறுத்த வேதாரண்யம் போலீசார், இந்த சம்பவத்துக்குப்பின்னர், சந்தேகச்சாவு என்று வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை உள்ளூர் போலீசார் விசாரித்தால், அமைச்சர், முன்னாள் எம்.எல்.ஏ. தலையீடு இருக்கும் என்பதால், சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் ஜான்சத்தியன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, சவுந்தர்யா சந்தேகச்சாவு குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க வேதாரண்யம் போலீசுக்கு இடைக்கால தடை விதித்தும், வழக்கிற்கு பதில் அளிக்க வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story