8 வழி சாலை திட்டத்தை ரத்து செய்ய எடப்பாடி பழனிசாமி ஒப்புதல்: விவசாயிகளிடம் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
8 வழி சாலை திட்டத்தை ரத்து செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டுள்ள நிலையில், விவசாயிகளிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
8 வழி சாலை திட்டம் ரத்து
சென்னை - சேலம் இடையிலான 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்தும்; அது தமிழக அரசின் கடமை என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். விவசாயிகளின் நலன்களை காக்கும் வகையிலான முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது மட்டுமின்றி பாராட்டத்தக்கதும் ஆகும்.
இந்த விஷயத்தில் பா.ம.க.வுக்கு இது 2-வது வெற்றி ஆகும். இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ம.க. சார்பில் நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பின் மூலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம் குறித்த அனைத்து அச்சங்களும் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. பசுமைச்சாலை அமைக்கப்பட இருந்த பகுதியைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும் வழக்கம் போல வேளாண்மைப் பணிகளை மேற்கொள்ள முடியும். பசுமைவழிச் சாலை மீண்டும் உயிர்பெற்று விடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு சற்றும் தேவையில்லை.
மன்னிப்பு கேட்க வேண்டும்
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வாங்கியதை தாங்கிக்கொள்ள முடியாத தி.மு.க. தலைவர் ஸ்டாலின், “சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யாது என்ற உறுதிமொழியை முதல்-அமைச்சர் பழனிசாமியிடம் இருந்து இந்த வழக்கைத் தொடர்ந்த அன்புமணி பெறுவாரா? அவ்வாறு பெற முடியாவிட்டால் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. விலகுமா?” என்று வினா எழுப்பியிருந்தார். இப்போது அதற்கு விடை கிடைத்து விட்டது.
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யாது என்பதையும் தாண்டி, ஐகோர்ட்டு தீர்ப்பை தமிழக அரசு செயல்படுத்தும் என்றே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இப்போதாவது இந்த விஷயத்தில் எனது வெற்றியையும், தமது தோல்வியையும் ஒப்புக்கொண்டு ஸ்டாலின் அரசியலில் இருந்து விலகிக் கொள்வாரா? என்பதை தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி விவசாயிகளிடம் அவர் மன்னிப்பும் கோர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story