‘எனது பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது’ கமல்ஹாசன் குற்றச்சாட்டு
பல இடங்களில் எனது தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்று கடலூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டினார்.
கடலூர்,
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து கடலூர் உழவர் சந்தை முன்பு திறந்த வேனில் நின்றபடி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
எத்தனை கூட்டத்தில் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், வெயிலில் மக்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். பல இடங்களில் எனக்கு தேர்தல் ஆணையத்தில் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. சில தெருக்களில் போகலாம் என்றால் பேச கூடாது என்கிறார்கள். எனக்கு தெரிந்த நடிப்பு தொழிலில் கண்ணால் பேசி வருகிறேன். அது மக்களுக்கு புரிகிறது.
அரசின் கடமை
காவல்துறையினரும் மனிதர்கள் தான். அவர்களை ஏவல் துறையாக்காமல் காவல்துறையாகவே வைத்திருக்க வேண்டியது அரசின் கடமை. அப்படி செய்தால்தான் குற்றங்கள் குறையும். மக்களும் நிம்மதியாக இருப்பார்கள். நீங்களும் (போலீஸ்காரர்கள்) ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்தீர்கள் என்றால் மனசு கோபப்பட்டுவிடும்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் இன்று அவர்கள் தலையில் உள்ள தொப்பியை கழற்றி வைத்துவிட்டு, சாதாரண மனிதர்களாக தபால் ஓட்டு போடும் நாள். (அப்போது கமல்ஹாசன் டார்ச் விளக்கை கையில் பிடித்து உயரே தூக்கி காண்பித்தார்). மக்களுக்கு எதுதேவை, உங்களுக்கு எது தேவை என்பதை யோசித்து பாருங்கள். தன்னால் உங்கள் கண்ணில் டார்ச் விளக்கு பளிச்சிடும்.
புரட்டிப்போடும் புரட்சி
திரளாக கூடி இருக்கும் மக்களை பார்த்து சினிமாக்காரர்களை பார்க்க வந்து இருப்பதாக சிலர் கொக்கரிக்கிறார்கள். கொக்கரிக்கட்டும். அது ஓட்டாக மாறும்போது தெரியவரும். சினிமாவை காசு கொடுத்து ஏ.சி. தியேட்டரில் பார்க்கலாம். அதில் நான் பாட்டுப்பாடுவேன், நடனம் ஆடுவேன். ஆனால் இங்கு மக்களுக்காகத்தான் பேசுவேன். மக்களுக்கான செயலைத்தான் செய்வேன்.
இந்த கூட்டம் ஒரு புரட்சியாக மாற வேண்டும். நீங்கள், நான் உள்பட அனைவருமே ஒரு புரட்சியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம். தமிழகத்தை புரட்டி போடும் புரட்சி அது. அதை செய்து காட்டுங்கள். பேச்சால், செயலால் அதை நிரூபியுங்கள். அப்படி நிரூபித்தால் நாளை நமதே.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story