ராஜராஜசோழன் நினைவிடத்தை தொல்லியல் துறை ஆய்வுசெய்ய வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ராஜராஜசோழன் நினைவிடம் அமைந்த பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
ராமநாதபுரத்தை சேர்ந்த வக்கீல் திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
சோழ சாம்ராஜ்யத்தின் பேரரசர் முதலாம் ராஜராஜசோழன் ஆட்சி காலத்தில் நுண்கலை, கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் என அனைத்து துறைகளும் சிறந்து விளங்கின. இதற்கான சான்றாக தஞ்சை பெரியகோவில் உள்ளது. அவர் ஆட்சியும், கட்டிடக்கலையும் தற்போது வரை உலக அளவில் அனைவராலும் பாராட்டப்படுகிறது.
ஆனால் அவரது நினைவிடம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உடையாளூர் என்ற கிராமத்தில் பராமரிப்பு இன்றி சிதைந்து கிடக்கிறது. இங்கு முறையாக தொல்லியல் ஆய்வு நடத்தினால் சோழர்களின் வரலாற்று சான்றுகள் கிடைக்கும். அவருடைய புகழை நிலைநிறுத்தும் வகையில் ராஜராஜசோழனின் சிலையை இந்திய பெருங்கடல் அல்லது வங்கக்கடல் பகுதியில் அமைக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
தொல்லியல் ஆய்வு
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, ‘உடையாளூர் பகுதியில் ராஜராஜசோழன் உடலை அடக்கம் செய்ததற்கான ஆதாரம் இல்லை’ என்றார்.
அதற்கு நீதிபதிகள், முழுமையாக ஆய்வு செய்யாமல் முடிவு செய்யக்கூடாது. எனவே தமிழக அரசின் தொல்லியல் குழுவினர் தற்போதைய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, ராஜராஜசோழன் நினைவிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். விசாரணை வருகிற 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Related Tags :
Next Story