அரசு ஒப்பந்ததாரர், பைனான்சியருக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.32 கோடி பறிமுதல்


அரசு ஒப்பந்ததாரர், பைனான்சியருக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.32 கோடி பறிமுதல்
x
தினத்தந்தி 13 April 2019 12:00 AM GMT (Updated: 2019-04-13T00:41:51+05:30)

தேர்தலையொட்டி அரசு ஒப்பந்ததாரர், பைனான்சியருக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.32½ கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்கும் நடவடிக்கையில் தேர்தல் கமிஷன் முனைப்புடன் செயலாற்றி வருகிறது.

அந்த வகையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் வாகன சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகளும் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

வேலூரில், தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீடும், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளருமான கதிர்ஆனந்துக்கு சொந்தமான இடங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் பல்வேறு இடங்களில் வருமான வரி சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கட்டுமான நிறுவனத்தில் சோதனை

இந்த நிலையில் தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் கீழ் நடைபெறும் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் பி.எஸ்.கே. கட்டுமான நிறுவனத்தில் கணக்கில் வராத பணம் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்துக்கு தொலைபேசி வாயிலாக புகார்கள் வந்ததாக தெரிகிறது.

நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம்தான், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கம், அரசு மருத்துவ கல்லூரிகள், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு போன்ற பல்வேறு கட்டுமான பணிகளை மேற்கொண்டது.

சென்னை

புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று, அந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நாமக்கல்லில் 4 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில், எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், பி.எஸ்.கே. நிறுவனத்தின் உரிமையாளர் அருண்குமாரின் இல்லம் உள்பட 3 இடங்களில் சோதனை நடந்ததாக தெரிகிறது.

இந்த சோதனையின் போது கணக்கில் வராத பணம் ரூ.14.54 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், செல்வாக்கு மிக்கவர்களுக்கு பணம் வழங்கியதற்கான ஆவணங்கள் உள்பட முறைகேடான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைனான்சியர்கள்

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக பைனான்சியர்களிடம் பணம் திரட்ட முயற்சிப்பதாக வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

எனவே அதன் பேரில் சென்னையில் பைனான்சியர்கள் ஆகாஷ் பாஸ்கரன், சுஜய் ரெட்டி ஆகியோருக்கு தொடர்புடைய 10 இடங்களிலும், நெல்லையில் ஒரு இடத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சுஜய் ரெட்டிக்கு தொடர்புடைய இடங்களில் இருந்து ரூ.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அதேபோன்று சுஜய் ரெட்டி மலேசிய கம்பெனி ஒன்றில் ரூ.16 கோடி முதலீடு செய்து இருப்பதற்கான ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும், அவர் தாக்கல் செய்த வருமான வரி கணக்கில் இந்த முதலீடு குறித்து தெரிவிக்காமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story