கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுகளுடன் இன்று முக்கிய ஆலோசனை தலைமை தேர்தல் அதிகாரி நடத்துகிறார்


கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுகளுடன் இன்று முக்கிய ஆலோசனை தலைமை தேர்தல் அதிகாரி நடத்துகிறார்
x
தினத்தந்தி 13 April 2019 4:30 AM IST (Updated: 13 April 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை, 

சென்னையில் தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

சென்னை, சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் தனிப்பட்ட முறையில் சோதனை நடத்தி வருகின்றனர். முழு சோதனையும் நிறைவடைந்ததும் அதன் விவரங்கள் தெரியவரும்.

வேலூரில் நடந்த வருமான வரி சோதனை தொடர்பான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கையாக அனுப்பிவிட்டேன். மேலும் விவரங்கள் கேட்கப்பட்டால் அதையும் அளிக்க தயாராக இருக்கிறேன்.

ரூ.128 கோடி சிக்கியது

உரிய ஆவணங்கள் கொண்டு செல்லாததால் தமிழகம் முழுவதும் இதுவரை ரூ.128.33 கோடி பணம் பிடிபட்டுள்ளது. 989.18 கிலோ தங்கம், 611 கிலோ வெள்ளி உள்பட ரூ.284 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தற்போது நபர் ஒருவர் தன்னுடன் 5 லிட்டர் மதுவை மட்டுமே கொண்டு செல்ல அனுமதி உள்ளது. அதற்கு மேலாக கொண்டு செல்லப்படும் மது பறிமுதல் செய்யப்படும். அந்த வகையில் ரூ.34.42 லட்சம் மதிப்புள்ள மது வகைகள் பிடிபட்டுள்ளன.

அவற்றில் 951 லிட்டர் ரம் மற்றும் பிராந்தி, 410 லிட்டர் பீர், 17 ஆயிரத்து 675 லிட்டர் எரிசாராயம், 178 பாட்டில் புதுச்சேரி மது வகைகள், 95 லிட்டர் சாராயம் ஆகியவை அடங்கும். அதுபோல ரூ.7.77 கோடி மதிப்புள்ள துணி வகைகள், சேலை, வேட்டி, மடிக்கணினி போன்ற பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

செல்போன் செயலியில் புகார்கள்

10-ந் தேதியில் இருந்து 13-ந் தேதிவரை போலீசார் வாக்களிப்பதற்கு ஏதுவாக மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு தபால் ஓட்டுகளை அளித்த தேர்தல் நடத்தும் அதிகாரியே தபால் ஓட்டுகளை பெற்றுக்கொள்வார். 13-ந் தேதியன்று (இன்று) சென்னையில் போலீசார் வாக்களிக்க உள்ளனர்.

‘சி விஜில்’ என்ற செல்போன் செயலி மூலம் 2,159 புகார்கள் வந்தன. அவற்றில் 946 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சரியான புகார் இல்லை என்பதால் 1,181 புகார்கள் கைவிடப்பட்டன. 32 புகார்களின் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளை மீறிய குற்றத்துக்காக தமிழகம் முழுவதும் 4,282 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக பதிவான வழக்குகளும் இதில் அடங்கும்.

கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை

தமிழகத்தில் தேர்தல் முன் ஏற்பாடுகளை உறுதிப்படுத்தும் வகையில் 13-ந் தேதி (இன்று) மாலை 6 மணிக்கு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்), போலீஸ் சூப்பிரண்டுகளுடன் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறேன்.

இதில் சட்டம்-ஒழுங்கு, வாக்கு எந்திரங்களின் தயார் நிலை உள்ளிட்ட பல அம்சங்கள் விவாதிக்கப்படும். அதுபோல துணை ராணுவத்தினரை அமர்த்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும். டி.ஜி.பி. (தேர்தல்) அசுதோஷ் சுக்லாவும் இதில் பங்கேற்பார்.

துணை ராணுவம் வருகை

தமிழகத்துக்கு 13-ந் தேதியில் இருந்து 150 கம்பெனி துணை ராணுவத்தினர் வரத்தொடங்குவார்கள். 15-ந் தேதிக்குள் அனைத்து கம்பெனி துணை ராணுவத்தினரும் வந்துவிடுவார்கள். ஏற்கனவே 10 கம்பெனி துணை ராணுவத்தினர் வந்துவிட்டனர்.

6 ஆயிரம் அரசு அதிகாரிகளைக் கொண்ட மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மண்டலக் குழுக்களுக்கு தலா 10 வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களிடம் வாகனம், மாற்று ஓட்டு எந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் ஆகியவை இருக்கும்.

வாக்குச்சாவடிகளுக்கு தேவையான ஓட்டு எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு செல்லுதல், பழுது ஏற்பட்டால் அங்கு வந்து அதை சரிசெய்வது அல்லது மாற்று ஓட்டு எந்திரங்களை வழங்குதல் போன்ற பணியை மேற்கொள்வார்கள். அவர்களுடன் போலீசாரும் இருப்பார்கள்.

கட்டுப்பாட்டு அறைகள்

தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்துக்காக 2 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பறக்கும் படையினர், கண்காணிப்புக் குழுக்கள் ஆகியவற்றின் பணிகளை அங்கிருந்தபடி அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.

ஓட்டுப்பதிவு அன்று, வெப் கேமரா மூலம் நேரடியாக வாக்குச்சாவடிகளை கண்காணிப்பதற்கான கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அதற்காக 16 கம்ப்யூட்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.

மதுக்கடைகள் விடுமுறை

தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. 16-ந் தேதி காலை 10 மணியில் இருந்து 18-ந் தேதி நள்ளிரவு 12 மணிவரை டாஸ்மாக் மதுபானங்களை தயாரிக்கவோ, எடுத்துச்செல்லவோ, வினியோகிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது. வாக்கு எண்ணப்படும் மே 23-ந் தேதியன்றும் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story