காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 60 ஆண்டுகளில் மக்களுக்கு செய்தது அநியாயமும், அநீதியும்தான் -பிரதமர் மோடி
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 60 ஆண்டுகளில் மக்களுக்கு செய்தது அநியாயமும், அநீதியும்தான் என தேனி பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
தேனி
தேனி ஆண்டிப்பட்டியில் நடைபெற உள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி கரிசல்விலக்கு பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தார்.
பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-
நாளை தொடங்குகிற தமிழ் புத்தாண்டிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். நாளை பாபா சாகேப் அம்பேத்கர் பிறந்த தினம். இந்த மைதானத்தில் வெப்பமும் அதிகமாக உள்ளது. உங்கள் உற்சாகமும் அதிகமாக உள்ளது.
நான் ஹெலிகாப்டரில் வரும்போது மைதானத்தில் கூடியிருக்கும் மக்களை கண்டேன், சாலை எங்கும் இருக்கும் மக்களை கண்டேன். நாளை நமதே நாற்பதும் நமதே.
ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிர் இழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறோம்.
ஒவ்வொருவரும் வளத்துடனும் கண்ணியத்துடன் வாழ நாம் புதிய இந்தியாவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். ‘புதிய இந்தியா’ என்ற கனவில் அதன் திசை நோக்கி செல்கிறோம்.
காங்கிரசும் , திமுகவும் மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள்.
ஊழலுக்கு ஆதரவாக மோடிக்கு எதிராக காங்கிரஸ் திமுக ஒன்று சேர்ந்து இருக்கிறது.
திமுக தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக அறிவித்தார். ஆனால் மக்கள் யாரும் மகிழ்ச்சி அடையவில்லை. அந்த கூட்டணியில் உள்ள யாரும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தலைவர்கள் தாங்கள் பிரதமராக வேண்டும் என்ற ஆசையில் உள்ளனர். பாஜக ஆட்சியில் நாடு அடைந்து வரும் வளர்ச்சியை காங்கிரஸ், திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 60 ஆண்டுகளில் மக்களுக்கு செய்தது அநியாயமும், அநீதியும்தான்.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஏழைகளுக்காக வாழ்ந்தார்கள், மக்கள் நலத்திட்டங்களை தந்தார்கள். ஏழைகளுக்காக வாழ்ந்த அந்த இருபெரும் தலைவர்களால் தேசம் பெருமை கொள்கிறது.
மத்திய பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் அரசு ஊழலில் ஈடுபட்டு உள்ளது. உங்கள் காவலாளியாகிய நான் உஷாராக இருக்கிறேன். எதிர்க்கட்சிகள் என்ன திருட்டுதனம் செய்தாலும் நான் கண்டுபிடித்து விடுவேன். நாட்டு மக்களை யாரும் முட்டாளாக்க விடாமல் நான் காவலாளியாக இருக்கிறேன்.
தமிழகத்தை ஒரு வளமான மாநிலமாக உருவாக்க நான் விரும்புகிறேன். வாரிசு அரசியல் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி அவசியம். நமது எதிராளிகளின் ஊழல்கள் பற்றி நான் கணக்கில் வைத்திருக்கிறேன்.
சர்ஜிக்கல் ஸ்ட்டிரைக் நடத்திய ராணுவத்தின் வீரத்தை கேள்வி கேட்கிறார்கள். ராணுவத்தை அவமதிக்கும் எதிர்கட்சிகளுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம். தேச பாதுகாப்பை அரசியலாக்கி, ராணுவத்தினரை காங்கிரஸ் அவமதிக்கிறது. நாட்டின் பாதுகாப்பில் சமரசம் கிடையாது. அபிநந்தனை விடுவிக்க எடுக்கப்பட்ட முயற்சியை அவமதிக்கிறார்கள்.
காங்கிரசும் திமுவும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள், தேனி மக்கள் அதை நன்கு அறிவார்கள்.
இலங்கை தமிழர்களின் வளர்ச்சிக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்திற்கு பிடிக்கவில்லை என எம்ஜிஆர் ஆட்சியை காங்கிரஸ் கலைத்தது. இந்த மண் புரட்சி தலைவர் மண், அம்மா ஜெயலலிதா மண்.
தேசிய ஜனநாயக கூட்டணி இறைவழிபாட்டை மதிக்க கூடிய கூட்டணியாக இருக்கிறது. மத்திய அரசின் திட்டங்கள் மூலம் தமிழக விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர் என கூறினார்.
Related Tags :
Next Story