குரூப் டி ஊழியர்களை வேறு மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் ஐகோர்ட்டு கருத்து
திருவள்ளூர் மாவட்டம், திரூரில் உள்ள வேளாண் பல்கலைக்கழக நெல் ஆராய்ச்சி மையத்தில் உதவியாளராக(குரூப்–டி) பணியாற்றி வருபவர் டி.சந்திசேகரன்.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம், திரூரில் உள்ள வேளாண் பல்கலைக்கழக நெல் ஆராய்ச்சி மையத்தில் உதவியாளராக(குரூப்–டி) பணியாற்றி வருபவர் டி.சந்திசேகரன். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிசி ஆராய்ச்சி மையத்திற்கு கடந்த மாதம் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார்.
அப்போது பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வக்கீல் அப்துல் சலீம், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2014–ம் ஆண்டு தொடங்கப்பட்ட நெல் ஆராய்ச்சி மையத்திற்கு அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தேவை என்ற அடிப்படையில் நிர்வாக காரணங்களுக்காக மனுதாரர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்‘ என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘பொதுவாக குரூப் டி ஊழியர்களை வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யக்கூடாது. அது அவர்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துவிடும். அதேநேரத்தில் நிர்வாக காரணங்களுக்காக இடமாறுதல் செய்வது தவிர்க்க முடியாதது. அதேநேரத்தில், தனக்கு தண்டனை தருவதற்காகத்தான் அதிகாரிகள் இடமாற்றம் செய்து உத்தரவிடுகிறார்கள் என்று மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் எதுவும் கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை. எனவே, மனுதாரர் தனக்கு வேறு மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடம் கேட்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பிக்கலாம். அதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்‘ என்று உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story