தமிழகத்தில் இதுவரை பறக்கும் படை சோதனையில் 991 கிலோ தங்கம் பறிமுதல் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
தமிழகத்தில் இதுவரை தேர்தல் பறக்கும் படை சோதனையில் 991 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் சத்யபிரத சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-
மண்டல குழுக்கள்
தமிழகத்தில் 10 முதல் 15 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு மண்டலக்குழு என்ற அளவில் 5,874 குழுக்களை உருவாக்கி இருக்கிறோம். அந்த குழுக்களுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் ஏதாவது பிரச்சினைகள் எழுந்தால், அங்கு உடனடியாக சென்று அதை தீர்த்து வைக்கும் வகையில் இந்த மண்டலக்குழு இயங்கும்.
தமிழகத்தில் பதற்றமான மற்றும் மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் 7,225 உள்ளன. இங்கு நடக்கும் வாக்குப்பதிவு, ‘வெப்’ கேமராக்கள் மூலம் நேரடியாக தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரியால் கண்காணிக்கப்படும். மற்ற வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை விட இங்கு சற்று அதிகம் செய்யப்பட்டு இருக்கும்.
பிடிபட்ட பணம்
தமிழகம் முழுவதும் கடந்த 12-ந் தேதி மட்டும் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.18 கோடி கைப்பற்றப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து இதுவரை தமிழகம் முழுவதும் ரூ.129.50 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை, கண்காணிப்பு குழு மூலம் இந்த தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
பறக்கும்படை, கண்காணிப்புக்குழு மற்றும் வருமான வரித்துறையினால் ரூ.52.75 கோடி கைப்பற்றப்பட்டது. அதில் வருமான வரித்துறை மட்டும் ரூ.40.10 கோடி கைப்பற்றி உள்ளது. கடந்த 12-ந் தேதி திருச்சி மணப்பாறையிலும், கரூரிலும் 2 இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
991 கிலோ தங்கம்
991 கிலோ தங்கம், 611 கிலோ வெள்ளி உள்பட ரூ.284.67 கோடி விலை மதிப்பு மிக்க பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ரூ.34.80 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள், ரூ.37.34 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்களை பறக்கும்படை, கண்காணிப்பு குழுவினர் கைப்பற்றியுள்ளனர். ரூ.7.81 கோடி மதிப்புள்ள வேட்டி, சேலை, துணி வகைகள், லேப்-டாப், குக்கர் போன்ற பொருட்களும் பிடிபட்டுள்ளன.
தமிழகத்தில் மொத்தமுள்ள 21 ஆயிரத்து 999 உரிமம் பெற்ற துப்பாக்கிகளில் 19 ஆயிரத்து 655 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story