லுங்கி வியாபாரி வீட்டில் ரூ.1 கோடி சிக்கியது வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை
அரக்கோணம் அருகே லுங்கி வியாபாரி வீட்டில் வருமான வரித்துறையினர் விடிய விடிய நடத்திய சோதனையில் ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
அரக்கோணம்,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தல் பறக்கும்படை மட்டுமில்லாமல் வருமான வரித்துறை அதிகாரிகளும் முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடத்தி கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள மின்னல் நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது 67). இவர், லுங்கிகளை உற்பத்தி செய்து இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக லுங்கி தொழிற்சாலை அதே பகுதியில் உள்ளது.
நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் 12 பேர் கொண்ட குழுவினர் தீனதயாளனின் வீடு, லுங்கி தொழிற்சாலை, குடோன், அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். மாலையில் தொடங்கி இரவு முதல் விடிய விடிய நடந்த இந்த சோதனை நேற்று அதிகாலை 4 மணி அளவில் முடிந்தது.
ரூ.1 கோடியே 4 லட்சம் பறிமுதல்
சோதனை முடிவில் ரூ.1 கோடியே 1 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அதே பகுதியில் உள்ள தீனதயாளனின் உறவினர் மாதவன் (45) என்பவரின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு கணக்கில் வராத ரூ.3 லட்சத்தை பறி முதல் செய்தனர்.
சோதனையின் போது அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story