மாநில செய்திகள்

129-வது பிறந்தநாள்: அம்பேத்கர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை + "||" + The heads of the Ambedkar idol are respected

129-வது பிறந்தநாள்: அம்பேத்கர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை

129-வது பிறந்தநாள்: அம்பேத்கர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை
அம்பேத்கர் 129-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
சென்னை, 

அம்பேத்கர் 129-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர். சென்னையில் உள்ள மணிமண்டபத்தில் பறை இசை நிகழ்ச்சி நடந்தது.

அம்பேத்கர் பிறந்தநாள்

சட்ட மேதை அம்பேத்கரின் 129-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, அவரது பிறந்தநாள் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் சிறுவர்-சிறுமிகள் பறை இசை முழக்கத்துடன் மரியாதை செலுத்தினர்.

சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு தமிழக அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இரா.வெங்கடேசன், செய்தித்துறை இயக்குனர் பொ.சங்கர், கூடுதல் இயக்குனர் உல.ரவீந்திரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

காஞ்சீபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம்

காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகே அமைந்துள்ள அம்பேத்கர் உருவச்சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கொள்கை பரப்பு துணை செயலாளர் வைகைச்செல்வன், அமைப்பு செயலாளர் வி.சோமசுந்தரம், காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் உள்பட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காஞ்சீபுரம் பஸ்நிலையத்தில் பயணிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் இனிப்புகள் வழங்கினார்.

ஆம்பூரில் மு.க.ஸ்டாலின்

தேர்தல் பிரசாரத்துக்காக ஆம்பூர் சென்றிருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் எஸ்.கோகுல இந்திரா, வடசென்னை மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா, ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கே.எஸ்.சீனிவாசன், மத்திய சென்னை தொகுதி பா.ம.க. வேட்பாளர் சாம் பால், வடசென்னை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னை துறைமுக பொறுப்புக்கழக தலைவர் பி.ரவீந்திரனும் மரியாதை செலுத்தினார்.

பிரேமலதா விஜயகாந்த்

பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், மாவட்ட செயலாளர் துரை காமராஜ், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சிவபதி உள்பட நிர்வாகிகளும், சென்னை பெருங்குடி பஸ்நிலையம் அருகே அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கழக குமார் உள்பட நிர்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கராத்தே தியாகராஜன்

சென்னை கோடம்பாக்கம் பவர் அவுசில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.