எதிர்க்கட்சியில் பிரதமராகும் தகுதி யாருக்கும் கிடையாது ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
எதிர்க்கட்சியில் பிரதமராகும் தகுதி யாருக்கும் கிடையாது என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்்செல்வம் காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தொலைநோக்கு திட்டங்கள்
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி மத்தியில் 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தார்கள். இதில் தமிழகத்தை சேர்ந்த 10 எம்.பி.க்கள் மத்திய மந்திரிகளாக இருந்தார்கள். அவர்கள் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. ஆனால் ஜெயலலிதா முதல்- அமைச்சரானதும் நாட்டு மக்களுக்காக நல்ல பல தொலைநோக்கு திட்டங்களை கொண்டுவந்தார்்.
தற்போது ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் அப்படியே மக்களுக்கு கொண்டு போய் சேர்த்து வருகிறோம். பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கினோம். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2,000 வழங்குகிறோம். உடனே தி.மு.க.வினர் கோர்ட்டுக்கு சென்று தடை பெற்றார்கள். ஆனால் உறுதியாகவே தேர்தல் முடிந்தவுடன் 60 லட்சம் ஏழை, எளிய மக்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும்.
பிரதமராகும் தகுதி
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த தேர்தலோடு அ.தி.மு.க. காணாமல் போய்விடும் என்று சொல்கிறார். 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட நம்முடைய இயக்கத்தை, பல சோதனைகள், வேதனைகளை தாண்டி மாபெரும் இயக்கமாக மாற்றியவர் ஜெயலலிதா. நம் கட்சியை அசைக்கவோ, எதிர்க்கவோ முடியாது. அ.தி.மு.க.வை தி.மு.க. தொட்டு கூட பார்க்க முடியாது.
தமிழகத்திற்கு ஏராளமான நன்மைகளை ஜெயலலிதா அரசு செய்திருக்கிறது. தொடர்ந்து செய்து வருவோம். இன்னும் 100 ஆண்டுகள் இந்த ஆட்சி தமிழ்நாட்டில் நிலைத்து இருக்கும். இந்தியாவுக்கு உலக அளவில் பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி. எதிர்க்கட்சியில் பிரதமராகும் தகுதி யாருக்கும் கிடையாது.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
கூட்டத்தில், காஞ்சீபுரம் மேற்கு மாவட்டச்செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், கழக அமைப்பு செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலிதிருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
பூந்தமல்லியிலும் பிரசாரம்
இதேபோல பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் நடந்த பிரசார கூட்டத்தில், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வைதியநாதன், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வேணுகோபால் ஆகியோரை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் பாண்டியராஜன், பென்ஜமின் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story