கடன் வாங்கி செலவு செய்ததால் ஆத்திரம் மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற போலீஸ்காரர்
கடன் வாங்கி செலவு செய்ததால் ஆத்திரத்தில் மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த போக்குவரத்து போலீஸ்காரர், போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
பெரம்பூர்,
சென்னை பெரம்பூரில் உள்ள செம்பியம் போலீஸ் குடியிருப்பு 3-வது ‘சி’ பிளாக்கில் வசித்து வருபவர் பிரேம்நந்தன் (வயது 37). இவர், கொத்தவால்சாவடி போக்குவரத்து போலீசில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அர்ச்சனா (33). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
அர்ச்சனா, வெளிநபர்களிடம் அதிகளவில் கடன் வாங்கி வீண் செலவுகள் செய்துவந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் இருவீட்டு குடும்பத்தாரும் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும், மீண்டும் சேர்ந்து வாழும்படி செய்தனர்.
அடித்துக்கொலை
ஆனால் அதன்பின்னரும் அர்ச்சனா, பலரிடம் கடன் வாங்கி ஜாலியாக செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை இதுதொடர்பாக அர்ச்சனாவிடம் பிரேம்நந்தன் தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் பிரேம்நந்தன், வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் மனைவி அர்ச்சனாவை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அர்ச்சனாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
போலீசில் சரண்
இதையடுத்து போலீஸ்காரர் பிரேம்நந்தன், உடனடியாக குடியிருப்பு வளாகத்தில் உள்ள செம்பியம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான அர்ச்சனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சரண் அடைந்த பிரேம்நந்தனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர். செம்பியம் போலீஸ் நிலையம் அருகேயே நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story