அம்பேத்கருக்கு முழு மரியாதை அளிப்பது மோடி அரசு தான் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


அம்பேத்கருக்கு முழு மரியாதை அளிப்பது மோடி அரசு தான் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 14 April 2019 9:20 PM GMT (Updated: 2019-04-15T02:50:35+05:30)

அம்பேத்கருக்கு முழு மரியாதை அளிப்பது மோடி அரசு தான் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காலம் காலமாக தமிழக மக்கள் சித்திரை மாதம் 1-ந் தேதியை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். அதிலும் தி.மு.க.வினர் பிரச்சினை செய்து கொண்டு இருக்கின்றனர். அம்பேத்கர் மீது பிரதமர் மோடி மிகுந்த மரியாதை வைத்து இருக்கிறார். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பண பரிமாற்றத்துக்கு ஒரு ஆன்லைன் செயலி உருவாக்கப்பட்டது. அதற்கு பீமாராவ் அம்பேத்கரின் பெயர் சூட்டப்பட்டது.

டெல்லியில் அம்பேத்கருக்கு பிரமாண்டமான நினைவிடம் கட்டப்பட்டு உள்ளது. அம்பேத்கர் இயற்றிய அரசியல் அமைப்பு சட்டம்தான் எனது புனிதநூல் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் தொழில் தொடங்க பல வாய்ப்புகளை கொடுத்து உள்ளார். எல்லா விதத்திலும் அம்பேத்கருக்கு முழு மரியாதையை அளித்துக்கொண்டு இருப்பது மோடி அரசு தான்.

பிரமாண்ட கூட்டணி

நாங்கள் பிரமாண்டமான கூட்டணி அமைத்து உள்ளோம். இந்த கூட்டணி இயல்பாகவே வெற்றி கூட்டணியாக உள்ளது. தூத்துக்குடி தொகுதியில் சிறப்பான வெற்றியை பெறுவோம்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், என்ன தைரியத்தில் தமிழிசை இங்கு வந்தார் என்று கேட்கிறார். இது என்னோட மண், நான் பிறந்து படித்து விளையாடிய மண். எனக்கு யார் தைரியம் கொடுக்க வேண்டும். இதே கேள்வியை நான் திருப்பி கேட்கிறேன். கனிமொழி என்ன தைரியத்தில் தூத்துக்குடிக்கு வந்தார்.

நேற்று டுவிட்டரில் பெரியாரின் படத்தை எடுத்துவிட்டு பனைமரத்தின் படத்தை வைத்து உள்ளார்கள். உங்களுக்கு ஓட்டு என்று வந்தவுடன் கொள்கை எங்கோ போய்விட்டது. ஏன் அதனை எடுத்துவிட்டு பனைமரத்தை வைத்து உள்ளர்கள். பெரியாரை தூக்கி வீசி விட்டீர்கள். பனைமரத்துக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்.

ஆனால் நான் அந்த பனங்காட்டில்தான் வளர்ந்தேன். அந்த பதநீரை குடித்து, கிழங்கை சாப்பிட்டு வளர்ந்து உள்ளேன். நாங்கள் எல்லோருக்கும் மரியாதை கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். இதே போன்று வேறு கட்சியினர் செய்து இருந்தால் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் அறிக்கை விட்டு இருப்பார்கள்.

பலம் இருக்கிறது

நான் ஏதோ தோற்பதற்காகவே இங்கு வந்து இருப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். அப்போது, கனிமொழி மேடையில் இருந்து சிரிக்கிறார். அப்படிப்பட்ட ஏளனமான விஷயத்தை நான் செய்யமாட்டேன். எங்களை பொறுத்தவரை பலம் இருக்கிறது. எங்கள் கூட்டணி பலம் இருக்கிறது. எங்கள் திட்டங்களின் பலம் இருக்கிறது. அதனால் நாங்கள் வெற்றி பெறுவோம்.

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பணம் கொடுத்து எங்களை தோற்கடித்து விட்டார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். ஏன் துரைமுருகன் நண்பர் வீட்டில் பணம் வைத்து இருந்தார்கள். திருமங்கலம் பார்மூலா ஆரம்பித்தது யார்?. ஆகையால் மு.க.ஸ்டாலின் எதை சொன்னாலும் மக்களிடம் எடுபடாது. எதுகை, மோனையில் பேசலாம். அதற்காக யாரோ எழுதி கொடுத்ததை பேசக்கூடாது. எதுகை மோனை பற்றி போட்டி போட என்னிடம் வரச்சொல்லுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story