“ஒற்றை கட்சி ஆட்சிமுறையை ஒழிக்க தயாராகுங்கள்” சென்னை தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேச்சு


“ஒற்றை கட்சி ஆட்சிமுறையை ஒழிக்க தயாராகுங்கள்” சென்னை தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேச்சு
x
தினத்தந்தி 14 April 2019 10:30 PM GMT (Updated: 14 April 2019 9:22 PM GMT)

காவி கட்டிய காங்கிரசும் வேண்டாம், கதர் கட்டிய பா.ஜ.க.வும் வேண்டாம், ஒற்றை கட்சி ஆட்சி முறையை ஒழிக்க தயாராகுங்கள் என்று தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசினார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சியின் தென்சென்னை தொகுதி வேட்பாளர் அ.ஜெ.ஷெரினை ஆதரித்து சோழிங்கநல்லூர், அடையாறு பகுதியிலும், மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து டி.பி.சத்திரம் பகுதியிலும் நேற்று பிரசாரம் செய்தார். அடையாறில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது:-

உண்மையிலேயே கொள்கையை கொண்டிருக்கிற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான். எப்படியாவது மக்களை ஏமாற்றிவிட வேண்டும் என்பது தான் பிற கட்சிகளின் கொள்கை. எப்படியாவது இவர்களிடம் இருந்து மக்களை காப்பாற்றிட வேண்டும் என்பது தான் எங்கள் கொள்கை.

2020-ம் ஆண்டு பூமிக்கடியில் தண்ணீர் இருக்காது என்று நிதி ஆயோக் அறிக்கையில் உள்ளது. தண்ணீரின் தேவையை, வளத்தை பெருக்க எந்த தலைவர்களும் திட்டங்கள் வகுக்கவில்லை. கார், செல்போன் கொடுப்போம் என்றார்கள். ஆனால் நீரும், சோறும் கொடுக்கும் திட்டத்துக்கான வரைவை யாரேனும் முன்னெடுத்துள்ளார்களா?

நோட்டுக்கு கூடிய கூட்டம்

நாம் தமிழர் கட்சி மட்டும் தான் ‘பசி ஒழிக்கப்படும், வேளாண் பணி அரசு பணி ஆகும், நீர்வளம் பெருக்கி தண்ணீர் வளத்தில் தன்னிறைவை அடைவோம்’ போன்ற கொள்கைகளை கொண்டிருக்கிறது. தண்ணீரை விற்பனையாக்கியது உலக உயிர்களுக்கு செய்யும் பச்சை துரோகம். மற்ற உயிரினங்கள் இல்லாமல் மனிதன் வாழவே முடியாது.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஒரு பக்கம் பா.ஜ.க., இன்னொரு பக்கம் காங்கிரஸ். அவர்களுடன் சேர்ந்து மாநில கட்சிகளும் வரிந்து நிற்கின்றன. இது கொள்கைக்காக கூடிய கூட்டம் அல்ல. இது நோட்டுக்காகவும், சீட்டுக்காகவும் கூடிய கூட்டம். அதனால் தான் இது நாட்டுக்கு பிடித்த பிணி, சனி என்கிறோம்.

கொள்கை மாற்றம் கிடையாது

கச்சத்தீவை மீட்போம் என்கிறது தி.மு.க. கச்சத்தீவு கொடுத்தது கொடுத்தது தான், இதனை திருப்பி வாங்கும் திட்டம் இல்லை என்கிறது காங்கிரஸ். இது என்ன மாதிரியான கொள்கையுடைய கூட்டணி? இதையே தான் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் சொல்கிறது. 7 தமிழர்களை விடுதலை செய்வதில் பா.ஜ.க.-காங்கிரஸ் இடையே நீளும் பிரச்சினை. முல்லை பெரியாறு, காவிரி விவகாரம் என்ற அனைத்திலுமே முரண்பாடுகள்.

மதசார்பற்ற கட்சி என்று சொல்லும் தி.மு.க. தான் முதன்முதலில் பா.ஜ.க.வை கூட்டணி என்ற பெயரில் தமிழகத்துக்கு கூட்டிக்கொண்டு வந்தது. கல்வி, மருத்துவம் என எல்லாவற்றிலுமே பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே கொள்கை மாற்றம் கிடையாது. அது காவி கட்டின காங்கிரஸ், இது கதர் கட்டின பா.ஜ.க.

ஏழைகளாக்கியது யார்?

இந்த 2 கட்சிகளையுமே ஒழிக்க வேண்டும். ஏழை மக்களுக்கு ரூ.72 ஆயிரம் தருவோம் என்கிறார் ராகுல்காந்தி. அவர்களை ஏழைகள் ஆக்கியது யார்? விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் தருவோம் என்கிறார் நரேந்திர மோடி. இதை ஏன் தேர்தல் நேரத்தின்போது அறிவிக்கிறீர்கள்? இது எல்லாமே வாக்கை பறிக்கிற ஏமாற்று வேலை. 5 ஆண்டில் செய்யாத சாதனைகளை அடுத்த 5 ஆண்டில் செய்யப்போகிறாரா மோடி?

கல்வி என்பதே மானிட உரிமை. அதை கொடுக்காமல் தனியார் முதலாளிகளிடம் விற்று ஒரு தொழிலாக கல்வி, மருத்துவம் போன்றவற்றை வியாபாரம் ஆக்கியது யார்? ஒற்றை கட்சி ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டும். அது நடக்காமல் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி மலராது.

எனவே இவர்களை வீழ்த்துங்கள். எங்களை போன்றவர் களை அந்த இடத்தில் வைத்து அழகு பாருங்கள். மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், பவன்கல்யாண், பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் வரட்டும். தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியும் வரட்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story