சாதி, மத பேதங்களை மறந்து நாம் அனைவரும் ஒன்றாக நின்றால் இந்தியாவின் தலைவாசலாக தமிழகம் மாறும் கமல்ஹாசன் பேச்சு


சாதி, மத பேதங்களை மறந்து நாம் அனைவரும் ஒன்றாக நின்றால் இந்தியாவின் தலைவாசலாக தமிழகம் மாறும் கமல்ஹாசன் பேச்சு
x

சாதி, மத பேதங்களை மறந்து நாம் அனைவரும் ஒன்றாக நின்றால் இந்தியாவின் தலைவாசலாக தமிழகம் மாறும் என்று திருச்சி பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசினார்.

திருச்சி,

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் திருச்சி தொகுதியில் ஆனந்தராஜா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் திருச்சி ஜங்ஷன் மற்றும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-

அரசு பள்ளிகளை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற வேண்டும். அரசு நினைத்தால் அதை செய்யலாம். ஆனால் சாராயத்தை கையில் எடுத்து, கல்வியை தனியாருக்கு கொடுத்ததால் வந்த வினை. அரசு பள்ளிகளை உலகத்தரம் வாய்ந்ததாக மக்கள் நீதி மய்யம் மாற்றும். இது பிரதமரை தேர்வு செய்யும் தேர்தல் தானே என்று நினைத்துவிடாதீர்கள். திருச்சி தொகுதியின் பிரதி நிதியை டெல்லிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கொல்கத்தா, மும்பை, டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் காமராஜர், அண்ணாதுரை, கக்கன் என்று ஒரு பெயரை காட்டுங்கள். அதுபோன்ற பெயர்கள் இருக்காது. ஆனால் திருச்சியிலோ, மதுரையிலோ, சேலத்திலோ நான் காந்தி என்ற பெயருடைய 100 பேரை காட்டுவேன். சுபாஷ்சந்திரபோஸ், படேல் என எத்தனை பேர் பெயர் வைத்து இருக்கிறார்கள். நாங்கள் டெல்லி தலைவர்களை எங்கள் தலைவர்களாக ஏற்றுக்கொண்டோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அறிஞர் அண்ணா கூறியதுபோல், தற்போது வரை தெற்கு தேய்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்காக தனியாக பிரிந்து செல்ல வேண்டும் என்பதில்லை. கூடவே இருந்து நமது குரலை அழுத்தமாக வைக்க வேண்டும்.

யார் பிரதமராக வந்தாலும் நம்முடைய தமிழகத்தை அவர் கள் கவனிக்கிறார்களா? என தட்டிக் கேட்க வேண்டும். மணல் கொள்ளையை கண் மூடித்தனமாக செய்கிறார்கள். இது மனிதனுக்கு எதிரான முட்டாள்தனமான செயல்.

கடந்த அரை நூற்றாண்டுகளாக மாறி, மாறி கழகங்களுக்கு வாக்கு அளித்து என்ன மாற்றத்தை கண்டோம்.

ஏழைகளை பாதுகாக்க முடியாமல், அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி மக்களை மூன்றாம் தர குடிமக்களாக மாற்றி விட்டார்கள். தமிழகத்தின் நதிக்கரை, நாகரிகம் என்று மார்தட்டி பேசினோம். இப்போது நதிக்கரையும் போய்விட்டது, நாகரிகமும் போய்விட்டது. ஸ்ரீரங்கம் முன்பு இருந்ததுபோல் இல்லை. வருங்காலத்தில் திருப்பதி போல மாற வேண்டும். நல்ல எதிர்காலத்துக்காக உங்கள் ஓட்டுரிமையை ஆயுதமாக பயன்படுத்துங்கள். சாதி, மத பேதங்களை மறந்து நாம் அனைவரும் ஒன்றாக நின்றால் இந்தியாவின் தலைவாசலாக தமிழகம் மாறும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story