ஓட்டுக்கு ரூ.20 ஆயிரம் வாங்குங்கள் என பிரசாரம்: மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. பரபரப்பு புகார்


ஓட்டுக்கு ரூ.20 ஆயிரம் வாங்குங்கள் என பிரசாரம்: மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 17 April 2019 9:30 PM GMT (Updated: 17 April 2019 8:45 PM GMT)

விதிமுறைகளை மீறி செயல்பட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. பரபரப்பு புகார் அளித்து உள்ளது.

சென்னை, 

ஓட்டுக்கு ரூ.20 ஆயிரம் வாங்குங்கள், தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகு பேட்டி என்ற பெயரில் மறைமுக தேர்தல் பிரசாரம் செய்து தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. பரபரப்பு புகார் அளித்து உள்ளது.

சத்யபிரத சாகுவிடம் மனு

அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுக்கு அனுப்பி உள்ள மனுக்களில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 15-ந்தேதி காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்போரூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட போது, ‘வாக்காளர்களிடையே, உங்களுடைய ஓட்டுக்கு ரூ.20 ஆயிரம் கேட்டு வாங்குங்கள் என்று தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக பேசி உள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் எண்ணங்களுக்கு முற்றிலும் மாறாக செயல்படும் மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் விதிமீறல், மக்களை லஞ்சம் வாங்க தூண்டுதல், சட்டம்-ஒழுங்கை சீர் குலைக்க முனைதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள்படி கடந்த 16-ந்தேதி மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்த பின்னர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்து மறைமுக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இது தேர்தல் நடத்தை விதிமீறல் செயல் ஆகும். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அ.ம.மு.க. பணப்பட்டுவாடா

தமிழகத்தில் 4 ஆயிரத்து 900 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று உளவுப்பிரிவு அறிக்கை மூலம் தேர்தல் ஆணையம் அடையாளம் கண்டுள்ளது. இதில் தி.மு.க.வினர் பெரும்பாலான வாக்குப்பதிவு மையங்களை கைப்பற்றவும், அசம்பாவித சம்பவங்களை அரங்கேற்றவும் முயற்சிப்பார்கள்.

எனவே வாக்குப்பதிவு நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெறும் வகையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளில் அ.ம.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்க முயற்சித்துள்ளனர். இது அரங்கேறினால் தேர்தல் நடவடிக்கைகளை கேலிக்கூத்தாகி விடும். எனவே இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், ரோந்து போலீசார் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வன்முறை வெறியாட்டம்

தேர்தல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லாவுக்கும் பாபு முருகவேல் தனியாக மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில், ‘தேர்தலில் தி.மு.க. தொண்டர்கள் வன்முறை வெறியாட்டத்தை மிகப்பெரிய அளவில் கட்டவிழ்த்து விட தயார் நிலையில் உள்ளதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. எனவே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி, தேர்தல் அமைதியான முறையில் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story