தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை ரத்து செய்தது செல்லும் என்றும், தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது என்றும் ஐகோர்ட்டு அதிரடியாக தீர்ப்பு கூறி உள்ளது.
சென்னை,
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிட்டார்.
இந்த தொகுதியில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகமும், பிற கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சைகளும் போட்டியிட்டனர்.
சமீபத்தில், வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள துரைமுருகனின் வீடு, அவரது மகன் கதிர்ஆனந்த் நடத்தும் பள்ளி, கல்லூரி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, கதிர்ஆனந்துக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் இருந்து சுமார் ரூ.10 கோடிக்கு மேல் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த பணம் எல்லாம், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற இருந்த தேர்தலை ரத்து செய்ய தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்தது. அதை ஏற்று, வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஏ.சி.சண்முகம், சுயேச்சை வேட்பாளர் சுகுமார் ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை அவசர வழக்காக நேற்று காலையில் விசாரிக்க தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி அனுமதி வழங்கினார்.
அதன்படி, விடுமுறை நாளான நேற்று இந்த வழக்குகளை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தார்.
அப்போது ஏ.சி.சண்முகம் சார்பில் மூத்த வக்கீல் சதீஷ் பராசரன் ஆஜராகி வாதாடினார்.
அவர் வாதாடுகையில், “தேர்தலை ரத்து செய்து ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், தி.மு.க., அதன் வேட்பாளர் கதிர்ஆனந்தை தவிர, வேறு கட்சியினர் மீதோ, வேட்பாளர்கள் மீதோ முறைகேடு புகார் கூறப்படவில்லை. ஒரு வேட்பாளர் முறைகேடு செய்தார் என்பதற்காக ஒரு தொகுதிக்கு நடைபெற உள்ள தேர்தலை ரத்து செய்து உத்தரவிட முடியாது. அதுவும் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டால், தேர்தல் நடவடிக்கையில் ஜனாதிபதி உள்பட யாரும் தலையிட முடியாது. அப்படி இருக்கும்போது, வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவே சட்டவிரோதம் ஆகும்” என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “கண் எதிரே நடைபெறும் முறைகேடுகளை பார்த்துக்கொண்டுதான் இருக்கவேண்டும். தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கூறுகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு சதீஷ் பராசரன் பதில் அளிக்கையில், “வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் களத்தில் இருந்த 22 வேட்பாளர்களில் கதிர்ஆனந்த் மீது மட்டும்தான் குற்றச்சாட்டு உள்ளது. அப்படியிருக்கும் போது, ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்துவிட்டு, அனைத்து வேட்பாளர்களுக்கும் ஏன் தண்டனை வழங்கவேண்டும்? அசாதாரண சூழ்நிலை, வாக்குச்சாவடியை கைப்பற்றுதல், கலவரம் உள்ளிட்ட சம்பவங்களின் அடிப்படையில்தான் தேர்தலை ரத்து செய்ய முடியும். அப்படி ஒரு நிலை வேலூர் தொகுதியில் இல்லை. ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பெரும் தொகையை அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டனர். எனவே, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை முன்கூட்டியே அதிகாரிகள் தடுத்துவிட்டனர். வாக்காளர்களுக்கு பணம் சென்றடையவில்லை. எனவே, தேர்தலை ரத்து செய்தது சட்டவிரோதம்” என்றார்.
இதையடுத்து சுயேச்சை வேட்பாளர் சுகுமார் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதாடினார்.
அப்போது அவர் கூறுகையில், “தேர்தலை ரத்து செய்து வெளியான அறிவிப்பாணையிலேயே, வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பெரும் தொகையை பறிமுதல் செய்துவிட்டதாக கூறப்பட்டு உள்ளது. அதனால், முறைகேடு நடைபெறவில்லை. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர், நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சுமார் ரூ.1,000 கோடிக்கு மேல் பறிமுதல் செய்து உள்ளனர். இதன்படி பார்த்தால், நாடாளுமன்ற தேர்தலை ஒட்டு மொத்தமாக ரத்து செய்யவேண்டியது வரும். அவ்வாறு செய்யாமல், நாட்டிலேயே ஒரே ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தலை ரத்து செய்வது சட்டவிரோதமாகும்” என்றார்.
தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன் ராஜகோபால் வாதாடுகையில் கூறியதாவது:-
பல கோடி ரூபாய் பறிமுதல் செய்ததற்காக மட்டும் வேலூர் தொகுதிக்கு தேர்தலை ரத்து செய்யவில்லை. அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. அதற்கான ஆதார ஆவணங்கள் தேர்தல் கமிஷனிடம் உள்ளது. இதன் அடிப்படையிலேயே தேர்தலை ரத்துசெய்ய பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் ‘பூத்’ வாரியாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வைத்திருந்த ஆவணங்கள், யார்-யாருக்கு எவ்வளவு பணம்? என்ற ஆதாரங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். ஒரு தொகுதிக்கு நடைபெற உள்ள தேர்தலை தேர்தல் கமிஷன் ரத்து செய்தால், அதில் நீதிமன்றம் உள்பட யாரும் தலையிட முடியாது. ஒரு தொகுதியில் வாக்காளர்களுக்கு ஒரு வேட்பாளர் பண பட்டுவாடா செய்தாரா? பல வேட்பாளர்கள் பண பட்டுவாடா செய்தனரா? என்பதை பார்க்க தேவையில்லை. வேலூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் சூழ்நிலை நிலவவில்லை. அதனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அந்த விவகாரத்தில் இந்த ஐகோர்ட்டு தலையிட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை ரத்து செய்தது செல்லும் என்று நேற்று மாலை அதிரடியாக தீர்ப்பு கூறினார்கள்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்தற்கான ஆதார ஆவணங்கள் தேர்தல் கமிஷன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், வருமான வரித்துறையினரின் அறிக்கை, தேர்தல் செலவின பார்வையாளர், மண்டல தேர்தல் செலவின பார்வையாளர் ஆகியோரது அறிக்கை அடிப்படையில் தான் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
தேர்தலை நடத்துவது குறித்து அறிவிப்பாணை வெளியிட அதிகாரம் கொண்ட இந்திய தேர்தல் கமிஷனுக்கு, அந்த தேர்தலை ரத்து செய்யவும் அதிகாரம் உள்ளது. கலவரம், வாக்குச்சாவடியை கைபற்றுதல், இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட காரணங்களுக்காகத்தான் ஒரு தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்ற மனுதாரர்கள் தரப்பு வாதங்களை ஏற்க முடியாது.
தேர்தலை ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை நிலவுவதாக தேர்தல் கமிஷன் முடிவு செய்தால், தேர்தலை ரத்து செய்து உத்தரவிட முடியும். இந்த உத்தரவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. இதுதொடர்பாக பல வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பல தீர்ப்புகளை வழங்கி உள்ளது. எனவே, வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து தேர்தல் கமிஷன் பிறப்பித்த உத்தரவு செல்லும். எனவே, இந்த வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story