யாருக்கு வெற்றி? தலைவர்கள் கருத்து


யாருக்கு வெற்றி? தலைவர்கள் கருத்து
x
தினத்தந்தி 18 April 2019 11:00 PM GMT (Updated: 18 April 2019 7:38 PM GMT)

வாக்களித்த பிறகு தலைவர்கள் அளித்த பேட்டியில் தங்கள் அணிக்கே வெற்றி என்று தெரிவித்தனர்.

சென்னை, 

வாக்களித்த பிறகு தலைவர்கள் அளித்த பேட்டியில் தங்கள் அணிக்கே வெற்றி என்று தெரிவித்தனர்.

அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்த கருத்து வருமாறு:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்:-

இந்த தேர்தல் என்பது இதுவரையில் நடந்த தேர்தல்களை எல்லாம் விட முக்கியமான தேர்தலாக அமைய போகிறது. ரூ.500, ரூ.1,000, ரூ.2 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம், சில இடங்களில் அதையும் தாண்டி வாக்குகளை வாங்குவதற்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்திருக்கிறது. இதையெல்லாம் மீறி, நோட்டுகளுக்கு அடி பணியாமல், நிச்சயமாக தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய வாக்காளர்கள் ஜனநாயகத்தை பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த அடிப்படையில் தான் இந்த தேர்தல் முடிவு அமையப் போகிறது.

மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்:-

எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதை பார்க்க முடிந்தது. மக்கள் கிளர்ந்து எழுந்து ஓட்டு போட்டிருக்கிறார்கள். இது தமிழகத்தில் வீசும் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா அலையையும், தி.மு.க. கூட்டணிக்கு எதிரான அலையையும் கண்கூடாக எடுத்து காட்டுவதாக அமைந்திருக்கிறது. மக்கள் முகங்களிலும் மகிழ்ச்சி தென்படுகிறது. எனவே நடைபெறும் 39 தொகுதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் இனி நடைபெற உள்ள 4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அனைத்திலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறுவது உறுதி.

தமிழக பா.ஜ.க. தலைவர்- தூத்துக்குடி வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-

தூத்துக்குடி தொகுதியில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். மற்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவார்கள். மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும் என்று அனைத்து மக்களும் ஆதரவு தந்துக்கொண்டிருக்கிறார்கள். தூத்துக்குடியில் மக்களுக்கு மற்றவர்கள் பணத்தை கொடுத்திருக்கிறார்கள். நான் குணத்தை கொடுத்திருக்கிறேன்.

தி.மு.க. மகளிரணி செயலாளர், தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி:-

தி.மு.க.-காங்கிரஸ் மதச்சார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நிச்சயமாக மிக சிறப்பான வெற்றியை பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. தற்போது இருக்கும் ஜனநாயகத்தை, அரசியல் அமைப்பு சட்டத்தை, நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்கவேண்டிய தேர்தல் இது.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-

இந்தியாவின் வளர்ச்சிப்பாதைக்கு உத்தரவாதம் தரும் அரசாக மோடி அரசு உள்ளது. அதே போன்று தமிழகத்தின் கிராம நகர வளர்ச்சிக்கு அ.தி.மு.க. பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். எனவே, இந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும், 18 சட்டசபை இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும்.

அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்:-

நாடாளுமன்ற-சட்டசபை இடைத்தேர்தலில் நிச்சயம் அ.ம.மு.க. மகத்தான வெற்றி பெறும். மாற்றத்தை விரும்புவோர் அ.ம.மு.க. பக்கம் தான் நிற்கிறார்கள். ஆர்வத்துடன் ‘பரிசு பெட்டகம்’ சின்னத்துக்கு வாக்களித்து உள்ளனர். வாக்குப்பதிவு எந்திரங்களை எப்படியெல்லாம் தவறாக பயன்படுத்த முடியுமோ, அப்படியெல்லாம் மோடி பயன்படுத்தி வருகிறார். காசு கொடுத்தால் மட்டும் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு ஓட்டுகள் கிடைத்துவிடுமா?

தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்:-

உலகத்தில் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் நடந்திருக்கிறது. இதற்கு தேர்தல் கமிஷனுக்கு நன்றிகள். ஒருசில இடங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது. அங்கு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மற்றவகையில் தேர்தல் கமிஷனில் செயல்பாடுகள் சிறப்பாகவே இருக்கிறது. மதுரையில் எதிர்சேவை நிகழ்வை முன்னிட்டு வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி. தமிழகம் முழுக்க அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகிறார்கள்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:-

தமிழகத்தின் பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இது தேர்தல் கமிஷனின் தோல்வியையே காட்டுகிறது. வேலூரில் தேர்தல் நிறுத்தப்பட்டது உச்சபட்ச நாடகம். ஏன் வேலூரில் மட்டும் தான் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதா? மற்ற தொகுதிகளில் பணம் வழங்கப்படவில்லையா? ஒருத்தர் செய்த தவறுக்கு அனைவரும் தண்டனை அனுபவிக்கிறோம்.

குற்றம் செய்தவரை தான் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். எதுக்கு தேர்தல் ரத்து செய்யவேண்டும்? இந்த தொகுதியில் மீண்டும் தேர்தல் அறிவித்தாலும் அவர் தான் வேட்பாளராக நிற்க போகிறார். இதேபோல பண வினியோகம் நடக்கத்தான் போகிறது. இது சரியான அணுகுமுறை கிடையாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story