மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம் வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை


மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம் வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை
x
தினத்தந்தி 19 April 2019 3:45 AM IST (Updated: 19 April 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் பட்டப் பகலில் வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார்.

மதுரை, 

மதுரையில் பட்டப் பகலில் வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார். ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டி சாய்த்த 5 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

தி.மு.க. செயலாளர்

மதுரை காமராஜர்புரத்தை சேர்ந்தவர் வி.கே.குருசாமி, தி.மு.க. மண்டல முன்னாள் தலைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டியன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இதனால் இருதரப்பினர் ஆதரவாளர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, ஏற்கனவே கொலை சம்பவங்களும் நடந்துள்ளன.

வி.கே.குருசாமி காரில் இருந்து சமீபத்தில் போலீசார் கைத்துப்பாக்கி ஒன்றை பறிமுதல் செய்தனர். அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு தற்போது அவர் நெல்லை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடைய மருமகன் பாண்டியன் (வயது 46), வக்கீலாகவும், தி.மு.க. பகுதி செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.

வீடுபுகுந்து வெட்டினர்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கட்சிப்பணியை மேற்கொண்டிருந்த பாண்டியன் நேற்று மதியம் 1 மணியளவில் கீரைத்துறை நாகுபிள்ளைதோப்பு பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது முகத்தை கைக்குட்டையால் முடியவாறு 5 பேர், பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்து இறங்கினர்.

அவர்களை பார்த்ததும் எம்.எஸ்.பாண்டியன் சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விரட்டிச் சென்றது. உயிர் பிழைக்க ஓடிய பாண்டியன் அங்குள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்தார். ஆனாலும் அந்த கும்பல் வீட்டிற்குள் புகுந்து பாண்டியனை சரமாரியாக வெட்டியது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

பழிக்குப்பழியாக நடந்ததா?

பட்டப்பகலில் பொதுமக்கள் திரண்டிருந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கும்பல் வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாண்டியனை அங்கிருந்தவர்கள் மீட்டு ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் பாண்டியன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீரைத்துறை போலீசார் அங்கு விரைந்து வந்து பாண்டியனின் உடலை பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

முன்விரோதத்தில் பழிக்குப்பழியாக இந்த கொலையை மர்ம நபர்கள் அரங்கேற்றி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வரும் போலீசார், பாண்டியனை வெட்டிய 5 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story