வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிப்பு


வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிப்பு
x
தினத்தந்தி 20 April 2019 4:45 AM IST (Updated: 20 April 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரி உள்பட 3 இடங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், கண்காணிப்பு கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிக் கப்பட்டு வருகிறது.

சென்னை,

சென்னையை பொறுத்தமட்டில் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கும், பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கும் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. வடசென்னை நாடாளுமன்ற தொகுதி மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ராணி மேரி கல்லூரியிலும், தென்சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்திலும், மத்திய சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை லயோலா கல்லூரியிலும் மே 23-ந் தேதி நடக்க உள்ளது.

தேர்தல் முடிந்ததும் நேற்று முன்தினம் இரவு வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டன. ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியின் கீழ் வரும் சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டன.

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு பாதுகாப்பு அறை (ஸ்ட்ராங்க் ரூம்) என்று பெயரிடப்பட்டு அந்த அறையில் எந்த சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளன? என்பது குறித்த விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை அந்தந்த தொகுதிகளின் தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் அதிகாரி மற்றும் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு அறைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறைகளின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள், ஆயுதப்படை போலீசார், உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு வெளியே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் பார்வையிட அகன்ற திரையுடன் கூடிய டி.வி.யும் வைக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள கட்டிடத்தில் இருந்து குறிப்பிட்ட தூரத்துக்கு முன்பாக தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதை தாண்டி யாரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாது என உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சுழற்சி அடிப்படையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

மேலும், தீ விபத்து போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால் அதனை உடனடியாக தடுக்க முன்னெச்சரிக்கையாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. தீயணைப்பு வாகனங்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடங்களை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான பிரகாஷ் பார்வையிட்டார்.

Next Story