தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது 91 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி திருப்பூர் மாவட்டம் முதல் இடம்


தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது 91 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி திருப்பூர் மாவட்டம் முதல் இடம்
x
தினத்தந்தி 20 April 2019 5:30 AM IST (Updated: 20 April 2019 4:03 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு முடிவு நேற்று வெளியானது. 91.3 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்தது.

சென்னை,

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி தொடங்கி 19-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 69 ஆயிரத்து 423 மாணவ-மாணவிகள் தேர்வை எழுதினார்கள். பள்ளி மாணவர்களாக தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 42 ஆயிரத்து 512 ஆகும்.

இதற்கு முன்பு வரை பிளஸ்-2 பொதுத்தேர்வில் கேள்விகள் 1,200 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டு வந்தது. இதில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. நடந்து முடிந்த தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டன.

தேர்வு முடிவு குறித்த தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தேர்தல் காரணமாக முன்கூட்டியே தேர்வு முடிவு வெளியாகும் என்று தகவல்கள் வெளியானது. அதைத்தொடர்ந்து, தேர்வு முடிவு திட்டமிட்டபடி வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்தது.

அதன்படி, தேர்வு முடிவு நேற்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தேர்வு முடிவை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணைய தளங்களில் தேர்வுத்துறை வெளியிட்டது. மாணவ- மாணவிகள் அந்த இணைய தளங்களுக்கு சென்று தங்களுடைய தேர்வு முடிவை அறிந்து கொண்டனர்.

மேலும், பள்ளி மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகளில் கொடுத்திருந்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தபோது கொடுத்திருந்த செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண்ணை 2 நிமிடங்களில் குறுந்தகவலாகவும் தேர்வுத்துறை அனுப்பியது.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிளஸ்-2 தேர்வு முடிவை வெளியிடும் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, பள்ளிக்கல்வி துறை மாநிலத்தில் முதல் இடம், 2-ம் இடம், 3-ம் இடம் பெற்றவர்கள் என்ற ‘ரேங்க்’ பட்டியல் முறையை முற்றிலும் மாற்றி அமைத்தது.

மாணவ-மாணவிகளின் மன அழுத்தத்தை தவிர்க்கும் வகையில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்தது. அந்த புதிய நடைமுறையின்படி, மாநிலத்தின் மொத்த தேர்ச்சி விகிதம், மாநிலத்தில் பள்ளிகள் பெற்ற தேர்ச்சி விகிதம் உள்பட சில குறிப்பிட்ட விவரங்களை கொண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 91.3 சதவீதம் பள்ளி மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். அதாவது 8 லட்சத்து 42 ஆயிரத்து 512 பள்ளி மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில், 7 லட்சத்து 69 ஆயிரத்து 225 மாணவ- மாணவிகள் தேர்ச்சி அடைந்து இருக்கின்றனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது (91.1 சதவீதம்) 0.2 சதவீதம் அதிகம் ஆகும்.

இதில் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 93.64 சதவீதம். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.57 சதவீதம் ஆகும். மாணவர்களை விட மாணவிகள் 5.07 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்து இருக்கின்றனர். கடந்த ஆண்டு மாணவிகள், மாணவர்களை விட 6.04 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்று இருந்தனர்.

மாநில அளவிலான தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. அந்த மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் 95.37 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக தேர்ச்சி விகிதத்தில் முதல் இடத்தில் இருந்த விருதுநகர் மாவட்டம் இந்த ஆண்டு 94.44 சதவீத தேர்ச்சியுடன் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.

95.23 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் 2-வது இடத்திலும், 95.15 சதவீத தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் 3-வது இடத்திலும் உள்ளன.

85.47 சதவீத தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தில் (32-வது இடம்) உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 7 ஆயிரத்து 83 மேல்நிலைப்பள்ளிகள் இருக்கின்றன. அதில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 1,281 ஆகும். தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 697. அதில் 2 ஆயிரத்து 404 பேர் தேர்ச்சி பெற்றனர். இதேபோல், 45 சிறைக்கைதிகள் தேர்வு எழுதியதில் 34 பேர் தேர்ச்சி பெற்றனர்.

முன்பெல்லாம் தேர்வு முடிவு என்றால் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் கூட்டம் அலைமோதும். தேர்வு முடிவு செல்போனில் வெளியிடப்பட்டதால், பெரும்பாலான மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு வரவில்லை. சில பள்ளிகளில் அந்த பள்ளி மாணவ- மாணவிகள் எடுத்திருந்த மதிப்பெண்கள் ஒட்டப்பட்டு இருந்தது. அதை மாணவ-மாணவிகள் வந்து பார்த்துச் சென்றனர்.

சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்று இருக்கிறது.

இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் 26-ந் தேதி வரை தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளி, தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் வழியாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்களுடைய மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், வருகிற 24-ந் தேதி காலை 9 மணி முதல் 26-ந் தேதி வரை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை www.dge.tn.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விவரங்களை அளித்து தாங்களாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நிர்வாக பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம்

பிளஸ்-2 தேர்வு முடிவில் நிர்வாக பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் வருமாறு:-

ஆதிதிராவிடர் நலவாரிய பள்ளிகள்    78.88

ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகள்    98.31

மாநகராட்சி பள்ளிகள்    86.86

வனத்துறை கட்டுப்பாட்டு பள்ளிகள்    88.32

அரசு உதவி பெறும் பள்ளிகள்    93.64

அரசு பள்ளிகள்    84.76

அறநிலையத்துறை பள்ளிகள்    91.41

கள்ளர் பள்ளிகள்    89.56

நகராட்சி பள்ளிகள்    86.77

ஓரியண்டல் பள்ளிகள்    98.59

பகுதி உதவி பள்ளிகள்    94.99

ரெயில்வே பள்ளிகள்    91.67

சுயநிதி மெட்ரிகுலேசன் பள்ளிகள்    98.26

மாநில கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுயநிதி பள்ளிகள்    97.46

சமூகநல பள்ளிகள்    93.52

பழங்குடியினர் நல பள்ளிகள்    87.04

பிளஸ்-2 தேர்வில் அறிவியல் பாடப்பிரிவில் 4,82,542 பேர் தேர்ச்சி

சென்னை,  பிளஸ்-2 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் அறிவியல் பாடப்பிரிவில் மொத்தம் 5 லட்சத்து 20 ஆயிரத்து 274 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 4 லட்சத்து 82 ஆயிரத்து 542 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்ச்சி சதவீதம் 92.75 ஆகும். வணிகப்பிரிவில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 13 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில், 2 லட்சத்து 30 ஆயிரத்து 602 பேர் தேர்ச்சி அடைந்து இருக்கின்றனர். இது 90.78 சதவீதம் தேர்ச்சி ஆகும்.

கலைப்பிரிவில் 13 ஆயிரத்து 290 பேர் தேர்வு எழுதினார்கள். அதில் 10 ஆயிரத்து 649 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 80.13 ஆகும். தொழிற்கல்வி பிரிவில் 54 ஆயிரத்து 935 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில், 45 ஆயிரத்து 432 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இது 82.70 சதவீதம் தேர்ச்சி ஆகும்.

மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் வருகிற 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும், பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன்-2019 சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேதிகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 6-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பாடப்பிரிவுகளில் தேர்ச்சி சதவீதம்

பிளஸ்-2 தேர்வு முடிவில், பாடப்பிரிவுகளில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் வருமாறு:-

இயற்பியல் 93.89

வேதியியல்    94.88

உயிரியல்    96.05

கணிதம்    96.25

தாவரவியல் 89.98

விலங்கியல்    89.44

கணினி அறிவியல்    95.27

வணிகவியல்    91.23

கணக்குப்பதிவியல்    92.41

மாவட்டம் வாரியாக தேர்ச்சி சதவீதம்:

திருப்பூர் முதல் இடத்தை பிடித்தது
பிளஸ்-2 தேர்வு முடிவில், மாவட்டம் வாரியாக தேர்ச்சி சதவீதம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் திருப்பூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

1) திருப்பூர்    95.37

2) ஈரோடு    95.23

3) பெரம்பலூர்    95.15

4) கோவை    95.01

5) நாமக்கல்    94.97

6) கன்னியாகுமரி    94.81

7) விருதுநகர்    94.44

8) நெல்லை    94.41

9) தூத்துக்குடி    94.23

10) கரூர்    94.07

11) சிவகங்கை    93.81

12) மதுரை    93.64

13) திருச்சி    93.56

14) சென்னை    92.96

15) தேனி    92.54

16) ராமநாதபுரம்    92.30

17) தஞ்சாவூர்    91.05

18) ஊட்டி    90.87

19) திண்டுக்கல்    90.79

20) சேலம்    90.64

21) புதுக்கோட்டை    90.01

22) காஞ்சீபுரம்    89.90

23) அரியலூர்    89.68

24) தர்மபுரி    89.62

25) திருவள்ளூர்    89.49

26) கடலூர்    88.45

27) திருவண்ணாமலை    88.03

28) நாகப்பட்டினம்    87.45

29) கிருஷ்ணகிரி    86.79

30) திருவாரூர்    86.52

31) விழுப்புரம்    85.85

32) வேலூர்    85.47

கடந்த ஆண்டு முதல் இடத்தை பெற்ற விருதுநகர் மாவட்டம் இந்த ஆண்டு 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 84.87 சதவீதமும், புதுச்சேரி மாவட்டத்தில் 91.22 சதவீதமும் தேர்ச்சி பதிவாகியுள்ளது.

Next Story