தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி முக்கிய கோவில்களில் யாகம் - இந்துசமய அறநிலைய துறை உத்தரவு


தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி முக்கிய கோவில்களில் யாகம் - இந்துசமய அறநிலைய துறை உத்தரவு
x
தினத்தந்தி 2 May 2019 5:18 AM IST (Updated: 2 May 2019 5:18 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பருவமழை பெய்வதற்காக முக்கிய கோயில்களில் யாகம் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் க.பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

க.பணீந்திர ரெட்டி, அனைத்து இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2019-20-ம் ஆண்டு ஸ்ரீவிகாரி ஆண்டில் நல்ல பருவமழை பெய்து நாடு செழிப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முக்கிய கோவில்களில் மழை வேண்டி யாகம் செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சில நிகழ்ச்சிகளை அவரவர் பிரிவில் உள்ள முக்கிய கோவில்களில், அந்தந்த கோவில்களின் பழக்க வழக்கத்துக்கு உட்பட்டு நடத்த அனைத்து சார்நிலை அலுவலர்களையும் கேட்டு கொள்கிறேன்.

* பர்ஜன்ய சாந்தி வருண ஜபம் வேள்வி செய்து சிறப்பு அபிஷேகம் செய்தல்.

* நந்தி பெருமானுக்கு நீர்த்தொட்டி கட்டி நந்தியின் கழுத்து வரை நீர் நிரப்பி வழிபாடு செய்தல்.

* ஓதுவார்களை கொண்டு சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய ஏழாம் திருமறை (மழை வேண்டும் பதிகம்) ஓதுதல்.

* திருஞானசம்பந்தர் இயற்றிய 12-ம் திருமுறையில் தேவார மழைப்பதிகத்தை மேகரா குறிஞ்சி என்ற பண்ணில் பாடி வேண்டுதல்.

* நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், வீணை வாத்தியங்களுடன் அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களை கொண்டு வாசித்து வழிபாடு செய்தல்.

* சிவன் கோவில்களில் சிவபெருமானுக்கு சீதள கும்பம் எனப்படும் தாராபாத்திர நீர் விழா செய்தல்.

* சிவ பெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்தல்.

* மகா விஷ்ணுவுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தல்.

* மழை வேண்டி பதிகங்கள் ஓதுதல்.

* ஸ்ரீ மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்தல்.

* நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் திருப்புன்கூர் சிவன் கோவிலில் உள்ள மகா நந்திக்கு மகாபிஷேகம் செய்தல்.

* வருண சூக்த வேத மந்திர பாராயணம் செய்தல்.

* வருண காயத்ரி மந்திர பாராயணம் செய்தல்.

இந்த நிகழ்ச்சிகளை அந்த கோவில்களின் பழக்க வழக்கத்துக்கு உட்பட்டு சிறப்பாக நடத்திட அக்கறையுடன் செயல்பட வேண்டும். இந்த நிகழ்வு தொடர்பாக கற்றறிந்தவர்களை தேர்வு செய்து மழை வேண்டி யாகம் செய்ய உடனடி நடவடிக்கைகளை சார்நிலை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

அந்த நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 


Next Story