ஐ.ஐ.டி.யில் படிக்க ஆசை: ‘100 சதவீதம் முயற்சி எடுத்து படித்தால் வெற்றி நிச்சயம்’ 3-ம் இடம் பிடித்த சென்னை மாணவர் பேட்டி
100 சதவீதம் முயற்சி எடுத்து படித்தால் வெற்றி நிச்சயம் என்றும், ஐ.ஐ.டி.யில் படிக்க ஆசைப்படுவதாகவும் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வில் 3-ம் இடம் பிடித்த சென்னை மாணவர் கார்த்திக் பாலாஜி தெரிவித்தார்.
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வில் சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மசேஷாத்ரி பாலபவன் சீனியர் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜி.கார்த்திக் பாலாஜி 500-க்கு 497 மதிப்பெண் பெற்று 3-வது இடத்தை பிடித்தார். இந்த சாதனை குறித்து கார்த்திக் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
கணிதம், வேதியியலில் தலா 100 மதிப்பெண்ணும், இயற்பியல், கணினி அறிவியல், ஆங்கிலத்தில் தலா 99 மதிப்பெண்ணும் பெற்று இருக்கிறேன். எனக்கு இயற்பியலும், கணிதமும் பிடித்த பாடப்பிரிவுகள். அதில் நல்ல மதிப்பெண் வந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய ஆசிரியர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
வெற்றி நிச்சயம்
வீட்டில் எனக்கு பெற்றோர் படிப்பதற்காக எந்த அழுத்தமும் கொடுக்கமாட்டார்கள். 100 சதவீதம் முயற்சி எடுத்து படிக்க வேண்டும். நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். இப்படி செய்தால் வெற்றி நிச்சயம்.
நான் கிரிக்கெட், கால்பந்து ஆட்டங்கள் மற்றும் டி.வி. நிகழ்ச்சிகள் அதிகம் பார்ப்பேன். படிப்பு என்று வரும்போது அதில் கவனம் செலுத்துவேன். மன அழுத்தம் இருக்கக்கூடாது. அமைதியான முறையில் அனைத்தையும் கையாள வேண்டும்.
கிரிக்கெட் வீரர் டோனி
கிரிக்கெட் வீரர் டோனியை பார்த்து அதை கற்றுக்கொண்டேன். நுழைவுத்தேர்வுகள் அதிகம் இருக்கிறது. அதில் என்னுடைய கவனத்தை செலுத்த தொடங்கி இருக்கிறேன். ஜே.இ.இ. முதன்மை தேர்வு தரவரிசை பட்டியலில் 409-வது இடத்தில் இருக்கிறேன். ஐ.ஐ.டி.யில் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிக்க ஆசை. வாய்ப்பு எதில் கிடைக்கிறதோ? அதை சரியாக பயன்படுத்துவேன்.
மாணவர்கள், மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று படிக்காதீர்கள். தேர்வு ஒருவரின் திறமையை தீர்மானிக்காது. உங்களிடம் பல திறமைகள் இருக்கும். படிப்பை நேசியுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கார்த்திக் பாலாஜியின் தந்தை பெயர் கணேஷ். இவர் காப்பீடு நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தாயார் பெயர் பார்கவி. அவர் எல்.ஐ.சி.யில் மண்டல மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
Related Tags :
Next Story