சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு சென்னை மண்டலம் 2-வது இடத்தை பிடித்தது
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியானது. சென்னை மண்டலம் 2-வது இடத்தை பிடித்தது.
சென்னை,
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு பிப்ரவரி 16-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 12 லட்சத்து 5 ஆயிரத்து 484 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். மொத்தம் 4 ஆயிரத்து 627 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவு மே மாதம் 3-வது வாரத்தில் வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் நேற்று தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. தேர்வு முடிந்து 28 நாட்களில் முதன் முறையாக சி.பி.எஸ்.இ. தேர்வு வாரியம் முடிவை வெளியிட்டு உள்ளது.
cbse.ex-a-m-r-esults.net, cbs-e-r-esult.nic.in, results.gov.in ஆகிய இணையதள முகவரிகளிலும் தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் பார்த்தனர். மாணவ-மாணவிகளின் செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டன. அந்தந்த பள்ளிகளிலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
மாணவிகள் அதிகம்
தேர்வு எழுதியவர்களில் 10 லட்சத்து 5 ஆயிரத்து 427 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். தேர்ச்சி சதவீதம் 83.4 ஆகும். இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, 0.39 சதவீதம் அதிகம். மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 88.70, மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 79.40 ஆகும். மாணவர்களை விட மாணவிகள் 9 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். 3-ம் பாலினத்தினர் 83.33 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
திருவனந்தபுரம் மண்டலம் 98.2 சதவீதம் பெற்று முதல் இடத்தையும், 92.93 சதவீதம் தேர்ச்சியுடன் 2-வது இடத்தை சென்னை மண்டலமும், 91.87 சதவீதம் தேர்ச்சியுடன் டெல்லி மண்டலம் 3-வது இடத்தையும் பெற்று இருக்கிறது.
சென்னை மாணவர் 3-வது இடம்
தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளில் 17 ஆயிரத்து 693 பேர் 95 சதவீதத்துக்கு மேலும், 94 ஆயிரத்து 299 பேர் 90 சதவீதத்துக்கு மேலும் மதிப்பெண்களை பெற்று இருக்கின்றனர்.
இந்த தேர்வில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஹன்சிகா சுக்லா, கரிஷ்மா அரோரா ஆகியோர் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்தனர். ஹன்சிகா சுக்லாவின் தந்தை நாடாளுமன்ற மாநிலங்களவை செயலாளராக உள்ளார். 2-வது இடத்தை 498 மதிப்பெண்களுடன் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த கவுராங்கி சாவ்லா, உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஐஸ்வர்யா, பாவ்யா ஆகியோர் பெற்றனர்.
சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பாலபவன் சீனியர் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜி.கார்த்திக் பாலாஜி 497 மதிப்பெண்களை பெற்று 3-வது இடத்தை பிடித்தார். அவருடன் சேர்த்து மொத்தம் 18 பேர் 3-வது இடத்தை பகிர்ந்து கொண்டனர்.
மோடி வாழ்த்து
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். மேலும் அதில், மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைய உறுதுணையாக இருந்த அவர்களின் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story