ஓட்டப்பிடாரம் தொகுதியில் வீதி, வீதியாக சென்று மு.க.ஸ்டாலின் பிரசாரம்


ஓட்டப்பிடாரம் தொகுதியில் வீதி, வீதியாக சென்று மு.க.ஸ்டாலின் பிரசாரம்
x
தினத்தந்தி 3 May 2019 4:30 AM IST (Updated: 3 May 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் தொகுதியில் வீதி, வீதியாக சென்று மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 30-ந் தேதி முதல் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவர் திண்ணை பிரசாரம், குடியிருப்போர் சங்க பிரதிநிதிகளுடன் சந்திப்பு மற்றும் முக்கிய கிராமங்களில் வேன் பிரசாரம் என தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று 3-வது நாளாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் வீதி, வீதியாக சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்தார். அவர் நடுகூட்டுடன்காடு, மறவன்மடம் பகுதிகளில் திண்ணையில் அமர்ந்தும், நடந்து சென்றும் ஓட்டு வேட்டையாடினார்.

குறைகள் கேட்டறிந்தார்

அப்போது மக்கள் தங்கள் பகுதி குறைகளாக, போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. பஸ் வசதி இல்லை. குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று கூறினார். அவற்றை கேட்டறிந்த மு.க.ஸ்டாலின், ‘என் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?. நிச்சயமாக உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று தெரிவித்தார்.

பின்னர் அங்கிருந்து அந்தோணியார்புரம் பகுதிக்கு வந்தார். அங்கு உள்ள ஒரு வீட்டின் அருகே நார்கட்டிலில் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வீதி, வீதியாக சென்று வாக்காளர்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார்.

பதனீர் அருந்திய மு.க.ஸ்டாலின்

அந்தோணியார்புரத்தில் மக்களை சந்தித்து பேசிய போது மக்கள் அன்போடு பனை ஓலை பட்டையில் பதனீரை மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோருக்கு வழங்கினர். அதனை மு.க.ஸ்டாலின் ருசித்து அருந்தினார். பின்னர், பதனீர் ரொம்ப டேஸ்டாக இருக்கிறது. நல்ல இனிப்பாக இருக்கிறது. இதில் சர்க்கரை போட்டு உள்ளர்களா? என்று கேட்டார்.

அதற்கு பதில் அளித்த மக்கள், பனையில் இருந்து வடித்து எடுக்கும் போதே இதே இனிப்புடன் இருக்கும். இதனுடன் சுண்ணாம்பு மட்டும் சேர்க்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர்.

செல்பி எடுக்க ஆர்வம்

வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தபோது, அங்கு வந்த இளைஞர்கள், இளம்பெண்கள் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர். தி.மு.க. தலைவரும், அவர்களுடன் நின்று செல்பி எடுத்துக் கொண்டார்.

தூத்துக்குடி அருகே உள்ள ஸ்பிக்நகர் தவசிபெருமாள் சாலையில் ஸ்பிக்நகர் குடியிருப்போர் நலச்சங்கம், உப்பள தொழிலாளர்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் நேற்று காலை நடந்தது.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

பின்னர் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மக்கள் பணி

தி.மு.க.வை பொறுத்தவரை இன்று தேர்தலுக்காக உங்களை சந்தித்து ஆதரவு கேட்க வந்து இருந்தாலும், எந்த நேரத்திலும் தேர்தல் இல்லாத காலகட்டத்திலும் கூட உங்களை தொடர்ந்து சந்திக்கும் கட்சி தி.மு.க.தான். தொடர்ந்து 8 ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சியில் இல்லை. இதனால் மக்களை பற்றி கவலைப்படாமல் அரசியலில் இருந்து ஒதுங்கி விடாமல் மக்கள் பணியில் இருந்த விலகி விடாமல் தொடர்ந்து எல்லா பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.

தி.மு.க. ஆட்சிக்கு வரப்போகிறது என்று எங்களுக்கு இருப்பதைவிட அதிகமான நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது. ஏனென்றால் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். வந்தால்தான் நாட்டுக்கு விடிவுகாலம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களாகிய உங்களுக்கு வந்து இருக்கிறது. நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

அ.தி.மு.க. மீது கோபம்

22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. இதில் வெற்றி பெற்று விட்டால் ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் 97 எம்.எல்.ஏ உள்ளனர். 22-ம் வந்த விட்டால் 119 எம்.எல்.ஏ. வந்து விடுவார்கள். 118 இருந்தால் ஆட்சிக்கு வந்து விட முடியும். இந்த தேர்தல் நிலவரத்தின் உண்மையை ஆளும் கட்சி தெரிந்து கொண்டது. உளவுத்துறை மூலம் செய்தி கிடைத்து உள்ளது. இதனால் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள 3 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க நோட்டீஸ் கொடுத்து உள்ளார்கள்.

ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளத்தான் அவர்கள் (அ.தி.மு.க.வினர்) செயல்படுகிறார்களே தவிர, அதன்மூலம் மக்களுக்கு பணியாற்றுகிறார்களா? என்றால் இல்லை. ஊழல் செய்வது, கொள்ளையடிப்பது போன்றவைதான் நடக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கனிமொழி எம்.பி.

அவருடன் தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர் நேரு எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Next Story