நெல்லை மாவட்டத்தில் சூறைக்காற்றால் வாழைகள் சேதம்: விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும வைகோ வலியுறுத்தல்


நெல்லை மாவட்டத்தில் சூறைக்காற்றால் வாழைகள் சேதம்: விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும வைகோ வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 May 2019 12:54 AM IST (Updated: 3 May 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு எதிர்பாராது வீசிய சூறைக்காற்றால் பல லட்சம் வாழைகள், நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் முழுவதுமாக விழுந்து விவசாயிகளுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு எதிர்பாராது வீசிய சூறைக்காற்றால் பல லட்சம் வாழைகள், நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் முழுவதுமாக விழுந்து விவசாயிகளுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. சூறைக்காற்றால் நான்குநேரி, ராதாபுரம், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் வட்டங்களைச் சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழைகள், தென்னைகள் அடியோடு விழுந்துவிட்டன.

ஒரு சில இடங்களில் கூரை வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்து உள்ளன. ஓட்டு வீடுகளும் சேதம் அடைந்து உள்ளன. வங்கிகளிலும், தனியாரிடமும் கடன் வாங்கி ஓரளவு வருவாய் ஈட்டலாம் என்று நம்பி வாழை பயிரிட்ட விவசாயிகள் நிலையை நினைக்கும்போது தாங்க முடியாத வேதனை ஏற்படுகிறது.

தற்போது சேத மதிப்பீட்டுப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றார்கள். எதிர்பாராத சூறைக்காற்றுத் தாக்குதலால் சேதமடைந்துள்ள வாழைகள், தென்னை உள்ளிட்ட மரங்கள், வீடுகள் விவரங்களை அரசுத் துறையினர் விரைவாக கணக்கெடுத்து, இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டதாகக் கருதி தேவையான நிவாரணம், இழப்பீட்டை வழங்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story