திருச்செந்தூரில் மயில் சிலையை கடத்த முயற்சி: கோவில் ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்


திருச்செந்தூரில் மயில் சிலையை கடத்த முயற்சி: கோவில் ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 3 May 2019 1:18 AM IST (Updated: 3 May 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மயில் சிலையை கடத்த முயற்சி செய்த வழக்கில் தொடர்புடைய கோவில் ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூலஸ்தானத்துக்கு எதிரே பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்லிலான மயில் சிலை சேதம் அடைந்ததாக கூறி, அதனை கடந்த 6-8-2017 அன்று இரவில் அகற்றிவிட்டு, போலி மயில் சிலையை வைத்தனர்.

இதற்கிடையே, பழமை வாய்ந்த மயில் சிலை அகற்றப்பட்டது குறித்து இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 15 நாட்களில் மீண்டும் பழமைவாய்ந்த மயில் சிலையை அதே இடத்தில் வைத்தனர். இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

6 பேர் மீது வழக்கு

விசாரணையில், இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்காமல், பழமைவாய்ந்த சிலையை வெளிநாட்டுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து திருச்செந்தூர் கோவிலில் திருமேனி காவல் பணியாளர்களான சுவாமிநாதன், ராஜா, கைங்கர்யசபை உறுப்பினர்களான குமார், சுரேஷ், உள்துறை கண்காணிப்பாளரான பத்மநாபன், அப்போதைய இணை ஆணையரான பரஞ்சோதி ஆகிய 6 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 120(பி), 457(2), 406, 109, 202, 217 ஆகிய பிரிவுகளில் திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 பேர் பணியிடை நீக்கம்

இதற்கிடையே, பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாக, கோவில் உள்துறை கண்காணிப்பாளர் பத்மநாபன், கோவில் ஊழியர் மணியம் சுப்பையன் ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து கோவில் இணை ஆணையர் குமரதுரை உத்தரவிட்டார்.


Next Story