திருச்சியில் இயங்கி வரும் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் முறைகேடு; நிர்வாகி கைது


திருச்சியில் இயங்கி வரும் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் முறைகேடு; நிர்வாகி கைது
x
தினத்தந்தி 9 May 2019 9:45 PM GMT (Updated: 2019-05-03T01:21:15+05:30)

திருச்சியில் இயங்கி வரும் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

திருச்சி, 

சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் நிறுவனத்தின் கவுரவ செயலாளர் பி.சுந்தரி, திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் 2 புகார் மனுக்கள் அளித்து இருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் நிறுவனத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் இந்திய தேசிய ஆணையத்தின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக திருச்சி மாவட்டத்தின் அண்ணாநகர் மேற்கு பகுதியில் 2 மாடி கட்டிடம் உள்ளது.

பணம் கையாடல்

இக்கட்டிடத்தின் பெரும்பகுதியில் தென்னூர் தபால்நிலையம் வாடகை அடிப்படையில் இயங்கி வருகிறது. ஆம்புலன்ஸ் நிறுவனத்தின் திருச்சி மாவட்ட தலைவர் கே.பாரி, செயலாளர் கே.பிரகாஷ் ஆகியோர் மாநில நிர்வாகத்தின் உத்தரவின்றி இதற்கு அனுமதி அளித்து உள்ளனர். அதன்மூலம் கிடைத்த வாடகை பணமானது அவர்கள் மூலம் தவறுதலாக கையாளப்பட்டு இருக்கிறது.

மேலும் கே.பாரியின் பெயரிலும் ஒரு தனியார் கம்பெனி முறைகேடாக இந்த கட்டிடத்திலேயே செயல்பட்டு வந்திருக்கிறது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 2 பேர் மீதும் குற்றவியல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவ பயிற்சியாளராக...

செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் நிறுவனத்தின் தேசிய தலைவராக ஜனாதிபதியும், மாநில தலைவராக கவர்னரும் உள்ளனர். எங்கள் நிறுவனத்தில் அளிக்கப்படும் குறுகிய கால பயிற்சியிலேயே (8 நாட்கள்) ஒரு நல்ல மருத்துவ பயிற்சியாளராக ஒருவர் அடையாளம் பெறமுடியும். அவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுடன் உரிய சான்றிதழ்கள் டெல்லி தலைமை அலுவலகத்தில் இருந்து வழங்கப்படும்.

ஆனால் இந்த நடைமுறைகளை பின்பற்றாமல் திருச்சி மாவட்ட தலைவர் பாரி மற்றும் பிரகாஷ் ஆகியோர், ஏராளமானோருக்கு போலியான சான்றிதழ்களை வினியோகித்து, தகுதியற்ற நபர்களும் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்த காரணமாக இருந்திருக்கிறார்கள்.

எனவே இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்ட திருச்சி மாவட்ட நிர்வாகிகள் பாரி மற்றும் பிரகாஷ் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது.

கைது

இந்த புகார் மனுக்கள் மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தார். அதன்படி இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பாரி கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் பிரகாஷை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story