தமிழகத்தில் கடும் வெப்பத்துடன் அனல் காற்று வீச வாய்ப்பு
தமிழகத்தில் கடும் வெப்பத்துடன் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. கடும் வெயில் காரணமாக பகலில் வெளியே தலைகாட்டவே மக்கள் பயந்துள்ளனர். சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அனல் காற்றால் நொந்து போனார்கள். தகிக்கும் வெயிலால் தவித்துபோன மக்களுக்கு கோடை மழை கானல் நீராகவே போய்விட்டது. ‘பானி’ புயலும் திசை மாறி தமிழகத்தை ஏமாற்றி விட்டது.
இந்த நிலையில் சித்திரை மாதத்தில் முத்திரை பதிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் காலம் தமிழகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. கோடை வெயிலை காட்டிலும் அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தும் என்பதால் கத்திரி வெயிலுக்கு மக்கள் பயந்து கிடந்தார்கள்.
எனினும் கத்திரி வெயில் காலத்தின் முதல் நாளான நேற்று வெயில் அவ்வளவு ஆக்ரோஷம் காட்டவில்லை என்றாலும், அனல் காற்று வீசியது.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தொடங்கிய அக்னி வெயில் காலையில் இருந்தே வெப்பம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
சாலையில் செல்வோரில் பெரும்பாலானோர் குடைபிடித்தபடி செல்வதை பார்க்க முடிந்தது. இளம்பெண்கள் துப்பட்டாவை சுற்றியும், ஆண்கள் கைக்குட்டை கொண்டு முகத்தை மறைத்தபடியும் வாகனம் ஓட்டி சென்றனர். கத்திரி வெயிலுக்கு பயந்து மக்கள் பெரும்பாலும் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் கடும் வெப்பத்துடன் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் 100 டிகிரி வரை வெப்பம் இருக்க வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் சிறிது மேகமூட்டத்துடன் காணப்படும்.
திருத்தணியில் அதிகபட்சமாக 111 டிகிரி பாரன்ஹீட் அளவில் வெப்பம் இருக்கும். தமிழகத்தில் அதிகபட்சமாக சோளிங்கரில் 14 செ.மீ. ஆர்.கே.பேட்டையில் 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story