ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எளிமைப்படுத்த வேண்டும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டில் தீர்மானம்


ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எளிமைப்படுத்த வேண்டும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 6 May 2019 4:47 AM IST (Updated: 6 May 2019 4:47 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி. வரி விதிப்பை எளிமைப்படுத்த வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 36-வது வணிகர் தின மாநாடு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடந்தது. பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். மாநில கூடுதல் செயலாளர் வி.பி.மணி, செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஜோதிமணி, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, அகில இந்திய வணிகர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் பிரவீண் கண்டேல்வால், சென்னை தங்கம்-வைரம் நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜலானி, தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க தலைவர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தே.மு.தி.க. வர்த்தகர் அணி செயலாளர் எஸ்.எஸ்.எஸ்.யு.சந்திரன், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தமிழக புலவர் குழு தலைவர் மணிமேகலை கண்ணன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

பேரமைப்பின் பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜூலு வரவேற்றார். பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா தீர்மானத்தை வாசித்தார். சென்னை மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம் நன்றி கூறினார்.

‘ஆன்-லைன்’ வர்த்தகம்

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

* ஜி.எஸ்.டி. வரி விதிப்பை முறைப்படுத்தி எளிமைப்படுத்த வேண்டும்.

* உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தில் உள்ள கடுமையான அபராதம், சிறை தண்டனையை நீக்க வேண்டும்.

* ‘ஆன்-லைன்’ வர்த்தகத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

* கடைகளுக்கு 100 சதவீத வரி என்பதை 50 சதவீதமாக விதிக்க வேண்டும்.

* ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடைகளை இடித்து புதிய வணிக வளாகங்கள் அமைக்கப்படும்போது, ஏற்கனவே கடை நடத்திவரும் வணிகர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பட்டாசு தொழில்

* சென்னையில் சிறப்பு ஏற்றுமதி வணிக மண்டலத்தை உருவாக்கி, சரக்கு பெட்டகத்தை கையாளும் முனையம் அமைக்க வேண்டும்.

* தேர்தல் ஆணையத்தால் சோதனை என்ற பெயரில் வணிகர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை திருப்பி தர வேண்டும்.

* பட்டாசு தொழிலை காப்பாற்ற சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* இரவு நேர கடைகள் நடத்த சட்டங்கள் அனுமதித்தும் போலீசாரின் அத்துமீறல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து மற்றும் வீரர் எஸ்.நவீன் ஆகியோருக்கு தங்க பதக்கம், இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. வணிகத்துறையில் சிறந்து விளங்கிய மூத்த வணிகர்களுக்கு வ.உ.சி. வணிகர் செம்மல் விருதுகள் வழங்கப்பட்டன.

அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

இதேபோல் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர் தின மாநாடு, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தது. அமைப்பின் மாநில தலைவர் கொளத்தூர் த.ரவி தலைமை தாங்கினார். திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் எம்.என்.ராஜா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

தமிழகத்தில் செயல்படாமல் இருக்கும் வணிகர் நல வாரியத்துக்கு நிதி ஒதுக்கி செயல்பட வைக்க வேண்டும், பெட்ரோல், டீசல் மற்றும் மணல் விலையை குறைக்க வேண்டும், வணிக உரிமம் வழங்குவதில் உள்ளாட்சி அமைப்புகளின் கெடுபிடிகள் நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story