சபாநாயகரின் நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் விதித்த இடைக்காலத் தடை எம்.எல்.ஏ. பிரபுவுக்கும் பொருந்தும் -சட்டப்பேரவை செயலகம்


சபாநாயகரின் நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் விதித்த இடைக்காலத் தடை எம்.எல்.ஏ. பிரபுவுக்கும் பொருந்தும் -சட்டப்பேரவை செயலகம்
x
தினத்தந்தி 7 May 2019 11:47 AM IST (Updated: 7 May 2019 11:47 AM IST)
t-max-icont-min-icon

சபாநாயகரின் நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட் விதித்த இடைக்காலத் தடை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவுக்கும் பொருந்தும் என சட்டப்பேரவை செயலகம் கூறி உள்ளது.

சென்னை,

அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரின் மீது சபாநாயகரிடம், கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் எம்எல்ஏக்கள் 3 பேரும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கக்கோரி, சபாநாயகர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கிடையே, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர, பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்தது.

இதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால் சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். தடை கோரி நீதிமன்றம் செல்ல விருப்பமில்லை எனவும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு தெரிவித்திருந்தார்.

தற்போது சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது சபாநாயகர் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இன்றுடன் சபாநாயகர் அளித்த கால அவகாசம் முடிவடைவதால் சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க ஒருவார காலம் கூடுதல் அவகாசம் கோரி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு பேரவை செயலாளர் சீனிவாசனிடம் மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து பிரபு கூறுகையில்; நான் சென்றபோது சபாநாயகர் இல்லாததால் பேரவை செயலாளர் சீனிவாசனிடம் மனு அளித்தேன். அதிமுகவை உரிமை கோரும் சசிகலா அணியில்தான் இன்னும் உள்ளேன். அமமுக என்பது அதிமுகவின் இன்னொரு அணி என விளக்கமளிக்க இருந்தேன். சபாநாயகர் உத்தரவுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மனுவில்  சுட்டிக்காட்டியுள்ளேன். மற்ற இரண்டு எம்.எல்.ஏக்களின் நோட்டீசுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன் எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில் சபாநாயகரின் நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவுக்கும் பொருந்தும். அவர் விளக்கம் தர தேவை இல்லை என  சட்டப்பேரவை செயலகம்  கூறி உள்ளது.

Next Story