அட்சய திருதியையொட்டி நகைக்கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம் கவர்ச்சியான சலுகைகளும் அறிவிக்கப்பட்டதால் மகிழ்ச்சி


அட்சய திருதியையொட்டி நகைக்கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம் கவர்ச்சியான சலுகைகளும் அறிவிக்கப்பட்டதால் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 8 May 2019 1:00 AM IST (Updated: 8 May 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

அட்சய திருதியை தினத்தையொட்டி, நகைக்கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. அதேநேரம் நகைக்கடைகளில் கவர்ச்சியான சலுகைகளும் அறிவிக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னை, 

அட்சய திருதியை தினத்தையொட்டி, நகைக்கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. அதேநேரம் நகைக்கடைகளில் கவர்ச்சியான சலுகைகளும் அறிவிக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அட்சய திருதியை

அட்சய திருதியை தினத்தில் என்ன வாங்கினாலும் அது பல்கி பெருகும் என்பது ஐதீகம். எனவே அன்றைய தினத்தில் பொருட்கள் வாங்கும் எண்ணம் மக்கள் அனைவருக்குமே உண்டு. குறிப்பாக அந்த எண்ணம் பெரும்பாலும் தங்க நகைகள் மீதே அதிகம் பிரதிபலிக்கும். அட்சய திருதியை அன்று ஒரு குண்டு மணி அளவாவது தங்கம் வாங்கிட வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் தோன்றும்.

அந்தவகையில் அட்சய திருதியை தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தலைநகர் சென்னையிலும் நகைக்கடைகளில் நேற்று மிகுதியான கூட்டத்தை பார்க்க முடிந்தது.

நகைக்கடைகளில் மக்கள் கூட்டம்

அட்சய திருதியை தினத்தில் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி நகைகள் தேர்வு செய்வது கடினம் என்பதால், பெரும்பாலானோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்பணம் கொடுத்து விரும்பிய நகைகளை தேர்வு செய்துவிட்டு சென்றனர். அதன்படி நேற்று நல்ல நேரம் பார்த்து நகைக்கடைகளுக்கு வந்து தேர்வு செய்த நகைகளை மகிழ்ச்சியுடன் மக்கள் வாங்கி சென்றனர்.

அதேவேளை சிறிய அளவிலாவது தங்கம் வாங்கிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் வந்த மக்களும் தங்களால் முடிந்த கம்மல், மூக்குத்தி போன்றவற்றை வாங்கினர். சிலர் கொலுசு உள்ளிட்ட வெள்ளி பொருட்களையும் வாங்கி செல்வதை பார்க்க முடிந்தது. பலர் அடுத்த ஆண்டு அட்சய திருதியை தினத்தன்று நகை வாங்கிடும் எண்ணத்தில் மாதம் பணம் கட்டும் நகைச்சீட்டு பதிவு செய்துவிட்டும் சென்றனர். இதனால் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.

கவர்ச்சியான சலுகைகள்

அதேவேளை வாடிக்கையாளர்களை கவரவும் நகைக்கடை உரிமையாளர்கள் பல்வேறு கவர்ச்சியான சலுகைகளை அறிவித்திருந்தனர். பவுனுக்கு ரூ.1,000 தள்ளுபடி, வைரம் வாங்கினால் தங்கம் இலவசம், தங்கம் வாங்கினால் வெள்ளி இலவசம், குறிப்பிட்ட எடையில் தங்கம் வாங்கினால் வெள்ளி பரிசு பொருட்கள் இலவசம், மார்க்கெட் விலையில் தங்க நாணயம் என்று அடுக்கடுக்கான சலுகைகளை அறிவித்து அசத்தினர். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அட்சய திருதியை தினமான நேற்று எல்லா நகைக்கடைகளும் மின் விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இது பண்டிகை கால சூழ்நிலையை நினைவுபடுத்தும் விதமாக அமைந்தது. பெரிய நகைக்கடைகளில் அலங்கார வளைவு, வாழை மரம் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வாடிக்கையாளர்கள் அனைவருக்குமே இனிப்புகள் வழங்கப்பட்டன.

ஆசை நிறைவேறியது

இதுகுறித்து மணலியை சேர்ந்த த.யோகேஷ்வரி என்பவர் கூறுகையில், “அட்சய திருதியை நாளில் எப்படியாவது தங்கம் வாங்கிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதன்படி ½ பவுனில் (4 கிராம்) ஒரு மோதிரமும், ½ பவுனில் தோடும் வாங்கியிருக்கிறேன். எனக்கு வெள்ளி நாணயமும் இலவசமாக கிடைத்தது. இது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது”, என்றார்.

இதேபோல பலரும் தங்கள் வசதிக்கேற்ப தங்கம்-வெள்ளி நகைகள் வாங்கி சென்றனர். சிலர் மாதா மாதம் கட்டி வந்த சீட்டு தொகையை பிரித்து அதற்குரிய நகைகளை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

அட்சய திருதியை தினத்தையொட்டி பல நகைக்கடைகளில் அறிவிக்கப்பட்டிருக்கும் சலுகைகள் இன்று (புதன்கிழமை) வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

போலீசார் கண்காணிப்பு

சென்னையின் வர்த்தக மையம் என்று அழைக்கப்படுவதும், அதிக நகைக்கடைகள் இருக்கும் பகுதியுமான தியாகராயநகரில் நேற்று நகைகள் வாங்க மக்கள் அதிகம் கூடியதால் பகலிலேயே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல பாரிமுனை, என்.எஸ்.சி. போஸ் ரோடு, சவுகார்ப்பேட்டை, பூக்கடை, மயிலாப்பூர், புரசைவாக்கம், பாடி, குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட நகைக்கடை அதிகம் நிறைந்த பகுதிகளிலும் நேற்று மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

அட்சய திருதியையொட்டி நேற்று அதிகாலை முதலே பெரும்பாலான நகைக்கடைகள் திறக்கப்பட்டன. நள்ளிரவு வரை விற்பனையும் நடந்தது. இதனைத்தொடர்ந்து நகைக்கடைகள் முன்பு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story