வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றியது ஏன்? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
கோவையில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டது ஏன்? என்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்து உள்ளார்.
சென்னை,
கோவையில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்பட்டது ஏன்? என்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்து உள்ளார்.
கோவை-தேனி
கோவையில் இருந்து தேனிக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை இடம் மாற்றம் செய்வதை எதிர்த்து தேனி தாசில்தார் அலுவலகம் முன்பு எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
இதுதொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
இயல்பான ஒன்று தான்
கேள்வி:- கோவையில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏன் தேனிக்கு மாற்றப்பட்டன?
பதில்:- இது இயல்பான ஒன்று தான். மறுவாக்குப்பதிவு தேவைப்படும் பட்சத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை இடமாற்றம் செய்வதின் அவசியம் ஏற்படுகிறது.
கேள்வி:- தற்போது வாக்குப்பதிவு எந்திரத்தை மாற்றுவதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது?
பதில்:- தற்போது எழுந்துள்ள தேவையின் அடிப்படையில் தேனிக்கும், ஈரோடுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. ஏதாவது வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் கமிஷனால் உத்தரவிடப்பட்டால் அந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கு பயன்படும்.
மறு வாக்குப்பதிவு?
கேள்வி:- அப்படியானால் குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்புள்ளதா?
பதில்:- அதற்கான உத்தரவை இந்திய தேர்தல் கமிஷன் தான் பிறப்பிக்க வேண்டும்.
கேள்வி:- தமிழகத்தில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் 8 வாக்குச்சாவடிகள், திருவள்ளூர் மற்றும் கடலூரில் தலா 1 வாக்குச்சாவடி என்ற விகிதத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தலாம் என்று தான் நீங்கள் பரிந்துரைத்தீர்கள். ஆனால் தற்போது தேனி, ஈரோடு ஆகிய பகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அப்படியானால் அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்பு உள்ளதா?
பதில்:- பரிந்துரைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை விட கூடுதல் வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட வாய்ப்பு உள்ளது. ஆனால் தற்போதைய நிலவரப்படி இந்திய தேர்தல் கமிஷன் எந்தெந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்பதற்கான ஆணையை பிறப்பிக்கவில்லை.
50 வாக்குப்பதிவு எந்திரங்கள்
கேள்வி:- எத்தனை வாக்குப்பதிவு எந்திரங்கள் தேனிக்கு மாற்றப்பட்டு உள்ளன?
பதில்:- கோவையில் இருந்து தேனிக்கு 50 வாக்குப்பதிவு எந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளன. மேலும் 20 பயன்படுத்தப்படாத ஒப்புகை சீட்டு எந்திரங்களும் கோவையில் இருந்து ஈரோடுக்கு மாற்றப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story