சினிமாவை விட அதிக நடிகர்கள் இருக்கிறார்கள் நடிகை காயத்ரி ரகுராம் அரசியலில் இருந்து விலகல்
அரசியலில் இருந்து விலகுவதாக நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.
சென்னை,
அரசியலில் இருந்து விலகுவதாக நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.
அரசியலில் இருந்து விலகல்
தமிழில் சார்லி சாப்ளின், ஸ்டைல், பரசுராம், விசில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் காயத்ரி ரகுராம். நடன இயக்குனராகவும் இருந்து வருகிறார். இவர் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை ஆதரித்து சமூக வலைத்தளத்தில் கருத்துகளும் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் அவருக்கும் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் காயத்ரி ரகுராம் திடீரென்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
“அரசியல் களம் தற்போது வாக்குவாதங்களில் ஈடுபடுவதும், மற்றவர்களை குறை சொல்வதும் என்று தரம் தாழ்ந்து போய்விட்டது. வழிநடத்த முதிர்ச்சியான தலைவர்கள் இல்லை. உருப்படியான காரியம் எதுவும் நடக்கவில்லை. நம்மால் இந்திய நாட்டின் தலையெழுத்தை மாற்ற முடியுமா? எதுவும் நடப்பதாக தெரியவில்லை.
அரசியலில் அதிக நடிகர்கள்
இப்போது அரசியலில் எனக்கு ஆர்வம் குறைந்து வருகிறது. சினிமாவை விட அரசியலில் அதிகம் நடிகர்கள் உள்ளனர். அரசியல் கட்சிகளில் தலைவர்கள், தொண்டர்கள், உறுப்பினர்கள் என எல்லோரும் போலியாக உள்ளனர். என்னால் 24 மணிநேரமும் நடித்துக்கொண்டிருக்க முடியாது. நேரம் வரும்போது உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பேன்.
என்னை பொறுத்தவரை அரசியல் என்பது வில்லன் கதாபாத்திரம். பேராசை, சுயநல எண்ணங்கள் என்று எல்லாம் எதிர்மறையாகவே உள்ளன. நான் அரசியலில் இருந்து விலகி வெளியில் இருந்து எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அதற்காக கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொள்கிறேன். நான் எந்த கட்சியையும் ஆதரிக்கப்போவது இல்லை.”
இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story