ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை உடனடியாக கவர்னர் விடுவிக்க வேண்டும் வைகோ வலியுறுத்தல்


ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை உடனடியாக கவர்னர் விடுவிக்க வேண்டும் வைகோ வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 May 2019 12:15 AM IST (Updated: 9 May 2019 10:55 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அமைச்சரவை ஏற்கனவே அனுப்பிய முடிவை ஏற்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 பேரையும் கவர்னர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.

சென்னை, 

தமிழக அமைச்சரவை ஏற்கனவே அனுப்பிய முடிவை ஏற்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 பேரையும் கவர்னர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

7 பேர் விடுதலை 


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறைச்சாலையில் வாடுகின்றனர்.

ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு, மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா முடிவெடுத்து, மத்திய அரசுக்கு தெரிவித்தபோது, மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டது. விடுதலை செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தை நாடியது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் அமர்வு, ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு, மத்திய அரசின் ஆட்சேபனைகளை நிராகரித்துவிட்டு இந்திய அரசியல் சட்டம் 161–வது பிரிவின்படி தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 6–ந் தேதி தீர்ப்பளித்தது.

விடுவிக்க வேண்டும் 


செப்டம்பர் 9–ந் தேதி தமிழக அமைச்சரவை ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு முடிவெடுத்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைத்தது. தமிழக கவர்னர் அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று, ஏழு பேரையும் விடுதலை செய்ய முன்வரவில்லை. இவர்கள் விடுதலை குறித்து மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் கருத்து கேட்கப்பட்டதாக செய்தி வெளியானது. மத்திய அரசிடம் இதுபற்றி கருத்து கேட்க வேண்டிய அவசியம் சட்டரீதியாக அறவே கிடையாது. அப்படியானால் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திடம் இதுகுறித்து கவர்னரே நேரடியாக கருத்துக் கேட்டாரா? அல்லது தமிழக அமைச்சரவை மூலம் கருத்து கேட்டாரா? என்பதுதான் எழுந்துள்ள கேள்வியாகும்.

மாநில அரசு அப்படி கருத்து கேட்டிருந்தால் அது சட்டத்திற்கும், நீதிக்கும் விரோதமான மோசடி நடவடிக்கையாகும். அதனால்தான் கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை என்னுடைய தலைமையில் தோழமைக் கட்சிகள் இணைந்து நடத்தி கைது செய்யப்பட்டோம். உச்சநீதிமன்றத்தில் ஏழு பேர் விடுதலையை எதிர்த்து மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தலைமை நீதிபதி அமர்வு தற்போது தள்ளுபடி செய்துவிட்டது. இந்த பிரச்சினை தமிழக கவர்னரிடம் இருக்கிறது. அங்கு முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. எனவே தமிழக அமைச்சரவை ஏற்கனவே அனுப்பிய முடிவை ஏற்று ஏழு பேரையும் கவர்னர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story