பாகிஸ்தான் கடற்படையினரால் சிறைபிடிப்பு: இந்திய மீனவர்கள் 34 பேரை விடுவிக்க வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
பாகிஸ்தான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 34 பேரை விடுவிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இந்திய மீனவர்கள் 34 பேர் அரபிக்கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது எல்லை தாண்டி வந்ததாக கூறி பாகிஸ்தான் கடற்படையினர் அவர்களை கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்திருப்பதும், மீனவர்களின் 6 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதும் ஏற்புடையதல்ல.
எனவே மத்திய அரசு பாகிஸ்தானோடு தொடர்புகொண்டு நமது மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமல்ல இனிமேல் இந்திய மீனவர்கள் தவறுதலாக எல்லை தாண்டினால் அவர்களை கைது செய்யவோ, படகுகளை பறிமுதல் செய்யவோ கூடாது என்பதையும் பாகிஸ்தான் அரசிடம் மத்திய அரசு அழுத்தத்தோடு தெரிவிக்க வேண்டும்.
மேலும் நமது மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் கொடுக்க ஏதுவாக அவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றித்தர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story