தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த காரணம் என்ன? தேர்தல் ஆணையம் விளக்கம்
தமிழகத்தில் மறுதேர்தல் நடக்கும் 13 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்துவதற்கான காரணங்களை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
சென்னை,
தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் காரணங்களின் விபரம் வருமாறு:-
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் உள்ள 248-வது வாக்குச்சாவடி 50 மாதிரி ஓட்டுகள் போடப்பட்ட பிறகு அவற்றை அப்புறப்படுத்த வாக்குச்சாவடி அதிகாரி தவறிவிட்டார்.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஓட்டுகளை சரிபார்த்தபோது கட்டுப்பாட்டு எந்திரத்தில் பதிவான ஓட்டுகள் மற்றும் 17ஏ ஆவணத்தில் பதிவான ஓட்டுக்கள் ஆகியவற்றில் 41 ஓட்டு வித்தியாசம் காணப்பட்டது. வித்தியாசம் 50 ஆக இருந்திருக்க வேண்டும். 9 ஓட்டுகள் காணாமல் போனது பற்றிய விவரத்தை அறிய முடியாததால் இங்கு மறுவாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம்
தேனி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் கம்மவார் சரஸ்வதி நடுநிலைப்பள்ளியில் உள்ள 67-வது வாக்குச்சாவடி மாதிரி ஓட்டுப்பதிவு விவரங்கள் கட்டுப்பாட்டு எந்திரத்தில் இருந்து நீக்கப்பட்டன. ஆனால் ஒப்புகைச் சீட்டுகள் எதையும் அப்புறப்படுத்தவில்லை.
தேனி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடுகப்பட்டி சங்கரநாராயணா நடுநிலைப் பள்ளியில் உள்ள 197-வது வாக்குச்சாவடி வாக்குப்பதிவு எந்திரத்தில் மேற்கொள்ள வேண்டிய சி.ஆர்.சி. என்ற நடைமுறையை பின்பற்றவில்லை. முன் அனுமதி இல்லாமல் வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டு எந்திரம் ஆகியவை மாற்றப்பட்டுள்ளன. ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்கு பதிவானதா?, மாற்றப்பட்ட எந்திரத்தில் பதிவானதா? என்பதை ஆதாரப்பூர்வமாக அதிகாரியால் விளக்க முடியவில்லை.
திருவள்ளூர், பூந்தமல்லி
திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் உள்ள 195-ம் வாக்குச்சாவடி- மாதிரி ஓட்டுகளை அப்புறப்படுத்தாமல் வாக்குப்பதிவை நடத்தியுள்ளனர். எனவே 38 ஓட்டுகள் வித்தியாசம் காணப்பட்டது. இதை சமன் செய்வதற்கு நோட்டாவில் 38 ஓட்டுகளை வாக்குச்சாவடி முதன்மை அதிகாரி போட்டுள்ளார்.
தர்மபுரி
தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 181 மற்றும் 182-ம் வாக்குச்சாவடிகள். நத்தமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள 192, 193, 194 மற்றும் 195 ஆகிய வாக்குச்சாவடிகள். ஜல்லிப்புதூரில் உள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் உள்ள 196 மற்றும் 197-ம் வாக்குச்சாவடிகள் இந்த 8 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுடன் வாக்குப்பதிவு எந்திரம் வரை கட்சி முகவர்கள் பலமுறை சென்றுள்ளனர். பல முதியவர்களின் ஓட்டுக்களை அவருடன் வந்தவர்களோ அல்லது கட்சி முகவர்களோ போட்டனர். அங்கு நேர்மையாக வாக்குப்பதிவு நடக்கவில்லை.
கடலூர்
கடலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட (பண்ருட்டி) திருவதிகை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் உள்ள 210-வது வாக்குச்சாவடி வாக்குப்பதிவு எந்திரத்தில் 16-ம் வேட்பாளரின் பெயருக்கான பட்டன் வேலை செய்யவில்லை. இதனால் நீல நிற பட்டன் அமிழ்ந்து, வெளியே தெரியாமல் இருந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story