வழக்கிற்கான கட்டணத்தை தராமல் செல்போனில் மிரட்டல்: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மணப்பாறை வக்கீல் புகார்
வழக்கிற்கான கட்டணத்தை தராமல் செல்போனில் மிரட்டல் விடுத்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மணப்பாறை வக்கீல் புகார் அளித்துள்ளார்.
மணப்பாறை,
கண்ணா லட்டு தின்ன ஆசையா, மனிதன், லத்திகா உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த வரதராஜன் (வயது 57) என்பவரிடம் நிதிநிறுவனத்தில் குறைந்த வட்டிக்கு ரூ.10 கோடி கடன் வாங்கி தருகிறேன். கமிஷனாக ரூ.60 லட்சம் தாருங்கள் என்று கேட்டார்.
அதன்படி வரதராஜன் கடந்த 2017-ல் ரூ.60 லட்சம் கொடுத்தார். ஆனால் சொன்னபடி பவர் ஸ்டார் சீனிவாசன் கடன் வாங்கி தரவில்லை. இதனால் கமிஷன் தொகையை திருப்பி தருமாறு வரதராஜன் கேட்டதால் ரூ.30 லட்சத்தை பணமாகவும், ரூ.30 லட்சத்துக்கு 6 காசோலைகளாகவும் பவர் ஸ்டார் சீனிவாசன் கொடுத்தார். ஆனால் இந்த காசோலைகள் பணம் இல்லை என திரும்ப வந்து விட்டது. இதையடுத்து வரதராஜன் துறையூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 2 வருடமாக இந்த வழக்கு விசாரணைக்காக பவர் ஸ்டார் சீனிவாசன் சார்பில் மணப்பாறை அருகே உள்ள பொம்மம்பட்டியை சேர்ந்த வக்கீல் பாண்டி ஆஜரானார். ஆனால் இந்த வழக்குக்கான கட்டணத்தை பாண்டி பலமுறை கேட்டும் பவர் ஸ்டார் சீனிவாசன் கொடுக்கவில்லையாம். இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி வக்கீல் பாண்டி செல்போனில் பவர் ஸ்டார் சீனிவாசனை தொடர்பு கொண்டு தனக்கு தரவேண்டிய கட்டணத்தை கேட்டார்.
அப்போது, “ஏன் அடிக்கடி போன் போட்டு தொந்தரவு செய்கிறாய். உனக்கு பணம்தரமுடியாது. உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்” என்று ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டி திட்டியதாக தெரிகிறது. செல்போனில் பதிவான ஆடியோ உரையாடலை மணப்பாறை போலீசாரிடம் காட்டி வக்கீல் பாண்டி புகார் அளித்தார். அதன்பேரில் மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story