நடப்பு கல்வி ஆண்டில் இருந்து அண்ணா பல்கலைக்கழக கல்வி கட்டணம் 2 மடங்கு அதிகரிப்பு மாணவர்கள்-பெற்றோர் அதிர்ச்சி


நடப்பு கல்வி ஆண்டில் இருந்து அண்ணா பல்கலைக்கழக கல்வி கட்டணம் 2 மடங்கு அதிகரிப்பு மாணவர்கள்-பெற்றோர் அதிர்ச்சி
x
தினத்தந்தி 11 May 2019 4:45 AM IST (Updated: 11 May 2019 4:16 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களின் கல்வி கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகம் 2 மடங்காக உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு மாணவர்கள் மற்றும் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகம் ஊழியர்களின் சம்பளம், கல்விக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், ஆய்வகங்களுக்கான உபகரணங்கள் வாங்குதல், தண்ணீர், மின்சாரம், பாதுகாப்பு போன்ற பல்வேறு காரணங்களால் அதிகரித்துவரும் செலவினங்களுக்காக தேவைப்படும் நிதியை ஈடு செய்வதற்காக நடப்பு கல்வி ஆண்டு (2019-20) முதல் மாணவர்களின் கல்வி கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் இதற்கு முன்பு 1999-ம் ஆண்டு கல்வி கட்டணத்தை உயர்த்தியிருந்தது. 20 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. புதிய கல்வி கட்டணம் தற்போது இருக்கும் கட்டணத்தோடு ஒப்பிடுகையில் தோராயமாக 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய கட்டண விகிதப்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள சுயநிதி படிப்புகளுக்கான கல்வி கட்டணம் ரூ.14,665-ல் இருந்து ரூ.20 ஆயிரமாகவும், ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படிப்புக்கான கட்டணம் ரூ.9,250-ல் இருந்து ரூ.21 ஆயிரம் ஆகவும் உயர்ந்துள்ளது.

இதேபோல பிற படிப்புகளுக்கான கட்டணம் ரூ.8,250-ல் இருந்து ரூ.20 ஆயிரமாகவும், அண்ணா பல்கலைக்கழகத்தில் அங்கம்வகிக்கும் கல்லூரிகளில் அனைத்து படிப்புகளுக்கான கட்டணம் ரூ.8,250-ல் இருந்து ரூ.15 ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது. புதிய கட்டண உயர்வு மாணவர்களையும், பெற்றோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா கல்வி கட்டண உயர்வு குறித்து கூறும்போது, “கல்வி நிறுவனங்களில் கட்டண உயர்வு என்பது தவிர்க்க முடியாதது. ஊழியர்களின் சம்பளம், கட்டுமானம் மற்றும் உபகரணங்களை மேம்படுத்துவதற்காக கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படவில்லை. எனவே கட்டண உயர்வு வழக்கத்துக்கு மாறானது அல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஐ.ஐ.டி.யில் கல்வி கட்டணம் ரூ.25 ஆயிரமாக இருந்தது இப்போது ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது” என்றார்.

பல்கலைக்கழக அதிகாரிகள் கூறும்போது, மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டண உயர்வு குறைவானது தான். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 2012-13-ம் ஆண்டு முதல் மானியம் வழங்குவதை தமிழக அரசு நிறுத்திவிட்டது. அதனை திரும்ப பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேசமயம் நெல்லை, கோவை, மதுரையில் உள்ள மண்டல வளாகங்களில் புதிய படிப்புகளை தொடங்குவதற்கும் நிதி தேவைப்படுகிறது என்றனர்.

Next Story