ஆளுங்கட்சிக்கு சாதகமாக தேர்தல்ஆணையம் செயல்படுவதாக சந்தேகம் கமல்ஹாசன் குற்றச்சாட்டு


ஆளுங்கட்சிக்கு சாதகமாக தேர்தல்ஆணையம் செயல்படுவதாக சந்தேகம் கமல்ஹாசன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 May 2019 5:08 AM IST (Updated: 11 May 2019 5:08 AM IST)
t-max-icont-min-icon

மறுவாக்குப்பதிவு மூலம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா? என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது என நடிகர் கமல்ஹாசன் குற்றம்சாட்டினார்.

ஆலந்தூர்,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றார். முன்னதாக அவர், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறிய தாவது:-

ராஜ்கமல் பிலிம்ஸ் புதிய தலைமை செயல் அதிகாரியின் கீழ் இயங்க உள்ளது. புதிய படம் ஒன்றை தயாரிக்கும் பணியும் நடக்கிறது.

சூலூர் தொகுதியில் நான் பிரசாரம் செய்யக்கூடாது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர் ஒருவரின் மனைவி மனு கொடுத்தாரா? அல்லது வேறு கட்சிக்காரர்கள் கொடுக்க வைத்தார்களா? என்பதை ஆராய வேண்டும். தூண்டுதலின் பேரில் இந்த புகார் செய்யப்பட்டு உள்ளது.

நீட் தேர்வில் விலக்கு அளிக்கவேண்டும் என்று தமிழ்நாடே வலியுறுத்தி கொண்டு இருக்கிறது. அதை அரசு சார்பில் வழிமொழிகிறார்கள்.

மறுவாக்குப்பதிவு மூலம் ஆளுங்கட்சிக்கு தேர்தல் ஆணையம் சாதகமாக செயல்படுகிறதா? என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.

மறுவாக்குப்பதிவு குறித்து எல்லா கட்சிகளையும் அழைத்து பேசி இருக்கலாம். வேட்பாளர்களிடம் மட்டும் சொன்னது போதாது. மறுதேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்களை வைக்க ஏற்கனவே உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறையை திறக்கக்கூடாது.

வேறு ஒரு பாதுகாப்பு அறையை உருவாக்க வேண்டும். தற்போது உள்ள பாதுகாப்பு அறையை திறந்தால் சந்தேகங்கள் எழும்பும். ஆவணங்களில் திருத்தம் செய்வதாக இருந்தால் அரசியல் கட்சிகளுக்கு தெளிவுப்படுத்திவிட்டுதான் செய்யவேண்டும்.

சினிமா தியேட்டர், சின்ன கடைகளில் ஜெனரேட்டர் இருக்கிறது. ஆனால் உயிரை காக்க கூடிய மருத்துவமனையில் ஜெனரேட்டர் இல்லாதது கேவலமாக இருக்கிறது. இதை பெரும் பிழையாக கருதுகிறேன். எல்லாமே இருக்கு, ஆனால் பழுதடைந்து உள்ளதாக கூறுவது அரசின் பிரச்சினை.

தமிழக அரசே பழுதடைந்துவிட்டது என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு. இந்த அரசை டெல்லியில் இருந்து ஜெனரேட்டர் வைத்து இயக்கினாலும் இயக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story