நாடு முழுவதும் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை


நாடு முழுவதும் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை
x
தினத்தந்தி 12 May 2019 12:15 AM GMT (Updated: 2019-05-12T02:38:30+05:30)

நாடு முழுவதும் வருகிற 23-ந் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்தினார். தமிழகத்துக்கு கூடுதல் துணை ராணுவ படை வீரர்கள் வருகிறார்கள்.

சென்னை,

நாடாளுமன்றத்துக்கு ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி மே 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. ஏற்கனவே 5 கட்ட தேர்தல் கள் முடிவடைந்துள்ள நிலையில், 6-வது கட்டமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 7-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 18-ந் தேதி நடைபெற்றது. அன்று 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்தது.

அப்போது நடந்த குளறு படிகளால் 13 வாக்குச்சாவடிகளில் வருகிற 19-ந் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்பட இருக்கிறது. அன்றைய தினம் திருப்பரங்குன்றம், அரவக் குறிச்சி, சூலூர், ஓட்டப் பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெறுகிறது.

7-வது கட்ட தேர்தல் வருகிற 19-ந் தேதி முடிவடைவதை தொடர்ந்து, நாடு முழுவதும் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, தேர்தல் கமிஷனர்கள் அசோக் லாவாசா, சுசில் சந்திரா ஆகியோர் நேற்று டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம், அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த ஆலோசனை 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் பாலாஜி, ராஜாராமன் ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

அவர்களிடம், தமிழகத்தில் இனி நடைபெறவுள்ள வாக்குப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை ஆகியவற்றுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் தயார் நிலை பற்றி தேர்தல் கமிஷன் உயர் அதிகாரிகள் விசாரித்து அறிந்தனர்.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன. பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதல் துணை ராணுவ படை வீரர்கள் வர இருப்பதாக சத்யபிரத சாகு தெரிவித்து உள்ளார்.

Next Story