உடன்குடி பகுதியில் பனை மரத்தில் புதிய முறையில் பதனீர் எடுக்கும் தொழிலாளர்கள்


உடன்குடி பகுதியில் பனை மரத்தில் புதிய முறையில் பதனீர் எடுக்கும் தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 13 May 2019 9:45 PM GMT (Updated: 13 May 2019 8:35 PM GMT)

உடன்குடி வட்டார பகுதியில் பனை மரத்தில் புதிய முறையில் ஏறி தொழிலாளர்கள் பதனீர் எடுத்து வருகின்றனர். இதை தொடர்ந்து தற்போது அந்த பகுதியில் கருப்புக்கட்டி உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது.

உடன்குடி,

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கருப்புக்கட்டி என்றாலே அதற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஊர் பெயரோடு ஊர் ஊராய் பவனி வரும் உடன்குடி கருப்புக்கட்டி உற்பத்தி தற்போது உடன்குடி வட்டார பகுதியில் தொடங்கப்பட்டு உள்ளது. இப்பகுதியில் உள்ள பனை மரத்தில் வளரும் பாளைகளை தொழிலாளர்கள் பக்குவப்படுத்தி கலசம் கட்டி காலையில் பதனீர் இறக்கி, கருப்பு கட்டி காய்ச்சுகின்றனர். மாலையில் பனை ஏறி பாளையை சீவி விடுகின்றனர்.

தினசரி காலை, மாலை என இருமுறை பனை மரத்தில் ஏறி இறங்க வேண்டும். ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் இந்த தொழில் விறுவிறுப்பாக நடக்கும். பனை மரத்தில் ஏறி இறங்குவதற்கு முன்பு இரு கால்களையும் சேர்த்து நார் போட்டு ஏறுவார்கள். நெஞ்சில் தழும்பு ஏற்படாமல் இருக்க நெஞ்சில் தோல் மாட்டுவார்கள். இந்த முறையில் தினசரி இருமுறை ஏறி இறங்குவதற்கு ஆட்கள் கிடைக்காததால் பனை ஏறும் முறையை தற்போது மாற்றியுள்ளனர்.

காயம் ஏற்படாது

பனை மரத்தில் கீழிருந்து உச்சி வரை தடுப்புகள் வைத்து கயிற்றினால் கட்டுகிறார்கள். இது ஒரு ஏணியை போல அமைந்து விடுகிறது. இதில் மளமளவென ஏறி பதனீர் எடுக்கின்றனர். இப்படி ஏறுவதால் நெஞ்சில் காயம், தழும்புகள் ஏற்படாது. இவ்வாறாக பனை ஏறி வரும் தொழிலாளி பெரியபுரத்தை சேர்ந்த முருகராஜ் கூறுகையில், “பனைத்தொழில் ஆண்டுக்கு ஆண்டு அழிவதற்கு முதல் காரணம் பனை ஏறுவதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் புதிய முறையில் பனை ஏறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய முறையில் பனை ஏறுவதற்கு பலர் தயாராக உள்ளனர்” என்றார். உடன்குடி பகுதியில் தற்போது எந்த கலப்படமும் இல்லாமல் பனை மரத்து பதனீரை வைத்து கருப்புக்கட்டி, பனங்கற்கண்டு, வெள்ளை நிற புட்டு கருப்புக்கட்டி ஆகியவற்றை சிலர் மட்டுமே தயாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story