ஓட்டு எண்ணிக்கை குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் தேர்தல் துணை ஆணையர்கள் ஆலோசனை சென்னையில் நாளை நடக்கிறது
ஓட்டு எண்ணிக்கை பற்றி மாவட்ட கலெக்டர்களுடன் இந்திய தேர்தல் துணை ஆணையர்கள் நாளை சென்னையில் ஆலோசனை நடத்துகின்றனர்.
சென்னை,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. மேலும் 4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலும், 13 வாக்குச்சாவடிகளில், மறுவாக்குப்பதிவும் 19-ந் தேதியன்று நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை 23-ந் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது. ஓட்டு எண்ணிக்கையின்போது, வாக்குப்பதிவு எந்திரங்களில் இருக்கும் எண்ணிக்கையையும், வி.வி.பி.ஏ.டி. என்ற ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் உள்ள சீட்டுகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு சரிபார்க்கப்படும்.
அனைத்து வி.வி.பி.ஏ.டி. எந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் எண்ணிக்கைக்கு உட்படுத்தாமல், ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 வி.வி.பி.ஏ.டி. என்ற விகிதத்தில் ஓட்டு எண்ணிக்கை சரிபார்ப்பு நடைபெறும். முதன்முறையாக தமிழகத்தில் இந்த வகையில் ஓட்டு எண்ணிக்கையில் சரிபார்ப்பு பணி நடைபெறவுள்ளது.
நாளை ஆலோசனை
இந்தநிலையில், ஓட்டு எண்ணிக்கை தொடர்பான ஆலோசனையை வழங்க இந்திய தேர்தல் ஆணையத்தில் இருந்து இரண்டு உயர் அதிகாரிகள் வரவுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த துணை ஆணையர் சந்தீப் சக்சேனா, துணை ஆணையர் சுதீப் ஜெயின், தமிழகத்தின் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்) மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்குகின்றனர்.
இந்த ஆலோசனைக்கூட்டம், கிண்டியில் உள்ள ரமதா பிளாசா ஓட்டலில் நாளை (15-ந் தேதி) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்தக்கூட்டத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சய்தபிரத சாகு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
சென்னை மாநகராட்சியில்..
இதற்கிடையே இன்று (14-ந் தேதி) சென்னை மாநகராட்சி அம்மா அரங்கத்தில், தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக்கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பணியில் உள்ள மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை வழங்குகிறார்.
Related Tags :
Next Story